வரதராஜப் பெருமாள் கோயில் புதிய தேரில் சக்கரம் பொருத்தம்
By DIN | Published On : 03rd July 2019 08:46 AM | Last Updated : 03rd July 2019 08:46 AM | அ+அ அ- |

பண்ருட்டி வரதராஜப் பெருமாள் கோயில் புதிய தேருக்கு சக்கரங்கள் பொருத்தப்பட்டன.
பண்ருட்டி, காந்தி சாலையில் வரதராஜப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பெளர்ணமி நாளன்று தேரோட்டம் நடைபெற்று வந்தது.
ஆனால், கோயில் தேர் பழுதடைந்ததைத் தொடர்ந்து கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தேரோட்டம் நடைபெறவில்லை. இந்த நிலையில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் புதிய தேர் கட்டமைக்க ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், உபயதாரர்கள் முயற்சியால் ராஜாஜி சாலையில் உள்ள தேர் நிலையில் தேர் கட்டமைக்கும் பணி தொடங்கியது.
ஆனால், இந்தப் பணியில் மந்த நிலை ஏற்பட்டது. இதனால், தேரின் அடிப்பாகம் மற்றும் திருச்சி பெல் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டு கொண்டுவரப்பட்ட சக்கரங்கள் மழை, வெயிலால் சேதமடையும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தினமணி நாளிதழில் அண்மையில் செய்தி வெளியானது.
இந்த நிலையில், கோயில் புதிய தேருக்கு சக்கரங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது. கிரேன் மூலம் தேர் தூக்கப்பட்டு இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்டன. இதுகுறித்து கோயில் ஊழியர் ஒருவர் கூறியதாவது: தேர் கட்டுமானப் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. எஞ்சிய பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு தேர் வெள்ளோட்டம் நடத்தப்படும் என்றார் அவர்.