குடிமராமத்து பணிகளை விவசாயிகள் கண்காணிக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர்

கடலூர் மாவட்டத்தில் ரூ.8.15 கோடியில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்வது தொடர்பாக விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சியர் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.

கடலூர் மாவட்டத்தில் ரூ.8.15 கோடியில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்வது தொடர்பாக விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சியர் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார். அப்போது, இந்தப் பணிகளை விவசாயிகள் கண்காணிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
 தமிழகத்தில் தற்போது வறட்சி நிலவி வரும் நிலையில், குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள மாநில அரசு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
 இதில், கடலூர் மாவட்டத்துக்கு ரூ.8.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 இந்த நிலையில், மாவட்டத்தில் குடிமராமத்து பணிகளை விவசாயிகளுடன் இணைந்து மேற்கொள்ள உள்ளதால் அதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது: வெள்ளாறு மற்றும் கொள்ளிடம் வடிநிலக் கோட்டங்கள் சார்பில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி ஆகிய வட்டங்களில் உள்ள 80-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறும் வகையில் 36 பணிகளுக்கு ரூ.8.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் மூலம் பணிகள் மேற்கொள்ளும் பகுதிகளில் விவசாயிகள் பாசன சங்கம் அல்லது அனைத்து ஆயக்கட்டுதாரர்கள் சங்கம் அமைக்க வேண்டும்.
 இதில், ஆயக்கட்டுதாரர்கள் 51 சதவீதத்துக்கும் குறையாமல் இருக்க வேண்டும்.
 அரசுக்கு மதிப்பீட்டு தொகையில் 10 சதவீதம் பங்களிப்பு செய்து பணிகளை செய்திட வேண்டும். குடிமராமத்து திட்டத்தின்கீழ் பண்ருட்டியில் செட்டிபட்டடை ஏரி, குறிஞ்சிப்பாடியில் கண்ணாடி ஏரி, சேராக்குப்பம் அய்யன் ஏரிகளில் கரைகளைப் பலப்படுத்தும் பணி, மதகுகளை மறு கட்டுமானம் செய்யும் பணி, வரத்து, வடிகால் வாய்க்கால்களை தூர்வாரும் பணி, உபரி நீர் வழிந்தோடும் பகுதிகளை சீரமைக்கும் பணிகள் நடைபெறும்.
 சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, குறிஞ்சிப்பாடி ஆகிய வட்டங்களில் 102 பாசன வாய்க்கால்கள் 302 கி.மீ. நீளத்துக்கும், 33 வடிகால்கள் 104.50 கி.மீ. நீளத்துக்கும் தூர்வாரப்பட உள்ளன. வாய்க்கால்களில் நீர் கடத்தும் திறனை மேம்படுத்தி, கடைமடை வரை பாசனத்துக்கு தடையின்றி நீர் வழங்கவும், மழை, வெள்ள காலங்களில் மிகுதியான நீரை கடத்தவும் இது உதவும். எனவே, விவசாயிகள் இந்தப் பணிகளை கண்காணிக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.
 குடிமராமத்தில் கடந்த ஆண்டில் பாசன வாய்க்கால்கள் 378 கி.மீ. நீளத்துக்கு தூர்வாரப்பட்டதாக பொதுப் பணித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
 கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ராஜகிருபாகரன், சார்-ஆட்சியர்கள் கே.எம்.சரயூ, விசுமகாஜன், வடிநில கோட்ட செயற்பொறியாளர்கள் வி.சாம்ராஜ் (சிதம்பரம், கொள்ளிடம்), ஆர்.மணிமோகன் (விருத்தாசலம், வெள்ளாறு), உதவி செயற்பொறியாளர்கள் எஸ்.அருணகிரி, எஸ்.குமார், சிங்காரவேலு, விவசாய சங்கப் பிரதிநிதி ஏ.பீ.ரவீந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com