சிதம்பரம் நகரில் கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணி!
By DIN | Published On : 14th June 2019 07:29 AM | Last Updated : 14th June 2019 07:29 AM | அ+அ அ- |

சிதம்பரம் நகரில் சாலைப் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
சிதம்பரம் நகரில் புதிய புதை சாக்கடை திட்ட பணிக்காக தோண்டப்பட்ட சாலைகள் சேதமடைந்ததால் கடந்த 2 ஆண்டுகளாக பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் புதை சாக்கடை திட்டப் பணிகள் 90 சதவீதம் வரை முடிவுற்றதை அடுத்து சாலைகள் நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டன. இதையடுத்து, சாலைகளை சீரமைக்க ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கான அனுமதி வழங்கப்பட்டது.
இந்தப் பணிக்காக, பள்ளிகள் திறப்பதற்கு ஒருநாள் முன்னதாக கடந்த 2-ஆம் தேதி சிதம்பரம் கடைத்தெரு, லால்கான்தெரு, கச்சேரி தெரு, நெல்லுகடை தெரு, தேரடி கடைத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பழைய சாலைகள் முழுவதும் கொத்தி போடப்பட்டன. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தச் சாலைகள் வழியாகவே ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப் பள்ளி, வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகள் செல்ல வேண்டியுள்ளது.
மேலும், வட்டாட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், பத்திரப் பதிவு அலுவலகத்துக்கு செல்லும் மக்களும் இந்தச் சாலைகளில் செல்ல வேண்டியுள்ளதால் அவதிப்படுகின்றனர். சாலைகள் கொத்தி போடப்பட்டு 10 நாள்களுக்கு மேலாகிறது. ஆனால், பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளதாக புகார் கூறப்படுகிறது.
வட்டாட்சியர் அலுவலகத்துக்கு செல்லும் பிரதான சாலையான லால்கான்தெரு சாலை கொத்தி போடப்பட்டு 10 நாள்களாகியும் அப்படியே உள்ளதால் ஜமாபந்திக்கு வந்த அதிகாரிகள், பொதுமக்கள் சிரமப்பட்டனர். எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, சாலைப் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.