சுருக்குமடி வலைகளுடன் 5 லாரிகள் பறிமுதல்
By DIN | Published On : 14th June 2019 07:32 AM | Last Updated : 14th June 2019 07:32 AM | அ+அ அ- |

கடலூரில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை ஏற்றி வந்த 5 லாரிகளை மீன்வளத் துறையினர் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் 60 நாள் மீன்பிடி தடைக் காலம் வருகிற 15-ஆம் தேதி நிறைவடைய உள்ள நிலையில், மீனவர்கள் தங்களது படகுகள், வலைகளை சீரமைத்து தயார்படுத்தி வருகின்றனர். சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இந்த நிலையில், கடலூர் முதுநகர் பகுதியில் மீன்வளத் துறை இணை இயக்குநர் ரம்யலட்சுமி தலைமையில் போலீஸார் வியாழக்கிழமை காலை சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 5 லாரிகளை மறித்து சோதனையிட்டதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகள் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், கடலூர் தேவனாம்பட்டினம், நல்லவாடு, மூர்த்திகுப்பம் ஆகிய பகுதிகளில் இருந்து கடலூர் துறைமுகத்துக்கு சுருக்குமடி வலைகள் கொண்டுசெல்ல முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து, சுருக்குமடி வலைகளுடன் 5 லாரிகளையும் மீன்வளத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு சுமார் ரூ.1 கோடி எனக் கூறப்படுகிறது.
பள்ளி, கல்லூரிகள் மூடல்: இதுகுறித்து தகவல் அறிந்த மீனவர்கள், தேவனாம்பட்டினம் பகுதியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், அந்தப் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதையொட்டி, தேவனாம்பட்டினம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவை மாநில மீனவர்களுக்கான கூட்டம் கடலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.