மத்திய அரசு நிதியுதவித் திட்டம்: விவசாயிகளுக்கு ஆட்சியர் அழைப்பு
By DIN | Published On : 14th June 2019 07:30 AM | Last Updated : 14th June 2019 07:30 AM | அ+அ அ- |

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் விவசாயிகள் சேர்ந்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் அழைப்பு விடுத்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதித் திட்டம் 24.2.2019 அன்று முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதி உதவியானது, நான்கு மாதங்களுக்கு ஒருமுறை தலா ரூ.2,000 வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டம் தற்போது அனைத்து விவசாயிகளுக்கும் அதாவது சிறு, குறு, நடுத்தரம் மற்றும் பெரிய விவசாயிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, உயர் வருவாய் பிரிவினர், நிறுவனத்தின் பெயரில் நிலம் உள்ளவர்கள் உள்ளிட்ட விலக்களிக்கப்பட்ட நபர்கள் தவிர, தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் இந்தத் திட்டத்தில் சேர கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பம் அளித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், வாரிசு அடிப்படையில் பட்டா மாறுதல் செய்துகொள்ளும் வாரிசுதாரர்களும், நிலமானது இறந்த தாய் அல்லது தந்தை பெயரில் இருந்தால் அதற்குரிய வாரிசுதாரர்களும் சம்பந்தப்பட்ட பகுதியின் வட்டாட்சியரை அணுகி உரிய முறையில் விண்ணப்பம் அளித்து 25.6.2019 தேதிக்குள் பட்டா மாறுதல் செய்து, அதன் அடிப்படையில் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதற்கென தற்போது நடைபெற்று வரும் ஜமாபந்தியை பயன்படுத்திக் கொள்ளுமாறும் விவசாயிகளை ஆட்சியர் அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.