சீரமைப்புக்காகக் காத்திருக்கும் இசைப் பள்ளி வளாகம்: அச்சத்துடன் கலையைக் கற்கும் மாணவர்கள்

கடலூர் அரசு இசைப் பள்ளி வளாகத்தில் செடி, கொடிகள் வளர்த்து, விஷ ஜந்துகளின் நடமாட்டம் உள்ளதால் மாணவர்கள் அச்சமடைகின்றனர். 

கடலூர் அரசு இசைப் பள்ளி வளாகத்தில் செடி, கொடிகள் வளர்த்து, விஷ ஜந்துகளின் நடமாட்டம் உள்ளதால் மாணவர்கள் அச்சமடைகின்றனர். 
தமிழகம் முழுவதும் 17 மாவட்ட அரசு இசைப் பள்ளிகள் இயங்கி வரும் நிலையில், கடலூர் மாவட்டத்தில் 1998- ஆம் ஆண்டு முதல் அரசு இசைப் பள்ளி தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது.
புதுப்பாளையம் பகுதியில் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்த இசைப் பள்ளி, தற்போது மாவட்ட ஆட்சியரின் பழைய அலுவலகத்தில் உள்ள பத்திரப் பதிவு அலுவலகக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. 
இங்கு குரலிசை (வாய்ப்பாட்டு), நாகசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் முதலிய 7 கலைகளில் மூன்றாண்டு சான்றிதழ் பயிற்சி முழு நேரமாக பயிற்றுவிக்கப்படுகிறது. இந்தப் பள்ளியில் சேர்வதற்கு ஆண்டுக்கு ரூ. 152 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வயது வரம்பு 13 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.  கலைப் பயிற்சியில் சேருவோருக்கு அரசு மாதந்தோறும் ஊக்கத் தொகையாக ரூ. 400 வழங்குவதுடன், இலவச பேருந்து பயண அட்டை, அரசு விடுதி உள்ளிட்ட வசதிகளையும் செய்து தருகிறது. இங்கு கலை பயில மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் சேர்ந்து வருகின்றனர். இந்த இசைப் பள்ளி அமைந்துள்ள இடம் மிகவும் ரம்மியமான இயற்கை சூழலில் அமைந்துள்ள போதிலும், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் அடிக்கடி வகுப்பறைக்குள் நுழைந்து விடுவதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.  ஏனெனில், மாவட்ட ஆட்சியரகமும், பத்திரப் பதிவுத் துறை அலுவலகமும் இடம் மாறிய பின்னர், இந்த வளாகம் முற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. ஏராளமான கட்டடங்கள் உள்ள நிலையில், இசைப் பள்ளியும், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மட்டுமே தற்போது செயல்படுகின்றன. மற்ற கட்டடங்கள் அரசின் பல்வேறு ஊழியர் சங்கங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால், ஆள் நடமாட்டம் குறைந்து, இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடைபெறும் பகுதியாக மாறியுள்ளது.
இதுகுறித்து அரிமா சங்க நிர்வாகி கே.திருமலை கூறியதாவது:
இசைப் பள்ளி எதிரே சிறிய அளவிலான குளம் உள்ளது. இந்தக் குளம் தூர்ந்துபோய் தற்போது செடி, கொடிகள் அதிகமாக வளர்ந்து பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகளின் நடமாட்டம் அதிகமாகிவிட்டது. 
எனவே, குளத்தைத் தூர்வாரி, சுற்றிலும் நடைமேடை அமைத்தால் அது இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக மாறி விடும். இசைப் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளுக்கும் உற்சாகம் தரும். மேலும், அவர்கள் பயமின்றி கலைகளை கற்கும் சூழல் உருவாகும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com