மளிகைக் கடையில் தீ விபத்து
By DIN | Published On : 14th June 2019 07:32 AM | Last Updated : 14th June 2019 07:32 AM | அ+அ அ- |

பண்ருட்டியில் மளிகைக் கடையில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
பண்ருட்டி டைவர்ஷன் சாலையில் வசிப்பவர் அரவிந்தன். இவர், காந்தி சாலையில் உள்ள தனது கடையில் நாட்டு மருந்து, மளிகை பொருள்கள், இலவம் பஞ்சு வியாபாரம் செய்து வருகிறார். வியாழக்கிழமை காலை வழக்கம்போல கடை திறக்கப்பட்டது. சற்று நேரத்தில் கடையின் மேல் மாடி கிடங்கில் வைக்கப்பட்டிருந்த ஹோம குச்சிகள், இலவம் பஞ்சு மூட்டைகள் தீப்பிடித்து எரிய தொடங்கின.
இதுகுறித்து தகவல் அறிந்த பண்ருட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் ரா.சக்கரவர்த்தி, போக்குவரத்து அலுவலர் வி.மணி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். பின்னர், நெல்லிக்குப்பத்தில் இருந்து நிலைய அலுவலர் லட்சுமணன் தலைமையிலான வீரர்கள்
வந்து இந்தப் பணியை மேற்கொண்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் தீயை அணைத்தனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தீ விபத்து காரணமாக காந்தி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்று வழியில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.