தவறி விழுந்த என்எல்சி ஊழியர் சாவு
By DIN | Published On : 06th March 2019 08:25 AM | Last Updated : 06th March 2019 08:25 AM | அ+அ அ- |

என்எல்சி உணவகத்தில் தவறி விழுந்த ஊழியர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
விருத்தாசலம் அருகே உள்ள அரசக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் ரட்சகர் (54). நெய்வேலி, வட்டம் 22-இல் குடும்பத்துடன் வசித்து வந்தார். என்எல்சி இந்தியா நிறுவனத்தின் புதிய பராமரிப்பு அலகில் ஆட்டோ யார்டில் முதன்மை தொழில்நுட்பவியலாளராகப் பணியாற்றி வந்தார். இவர் செவ்வாய்க்கிழமை காலை பணிக்குச் சென்றார். தொடர்ந்து அதிக நேரம் பணியில் ஈடுபட்டாராம். மதியம் உணவு அருந்த அங்குள்ள உணவகத்துக்குச் சென்றவர், தரை வழுக்கியதில் தவறி விழுந்தார். இதில், அங்கு அமர்வதற்காக கட்டப்பட்டிருந்த சிமென்ட் கட்டையில் விழுந்து தலையில் காயமடைந்தார். இதையடுத்து அவர் என்எல்சி பொது மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தெர்மல் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.