சுருக்குமடி வலையில் மீன் பிடித்ததற்கு எதிர்ப்பு: புதுவை மீனவர்கள் சிறைபிடிப்பு
By DIN | Published On : 22nd March 2019 09:18 AM | Last Updated : 22nd March 2019 09:18 AM | அ+அ அ- |

சிதம்பரம் அருகே புதுச்சத்திரம் கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையில் மீன்பிடித்த புதுவை மீனவர்களை அந்தப் பகுதி மீனவர்கள் வியாழக்கிழமை சிறைப் பிடித்தனர்.
தமிழக அரசு சுருக்குமடி வலையில் மீன்பிடிக்க தடை விதித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் சிலர் தடையை மீறி சுருக்குமடி வலையில் மீன்பிடிப்பதால் மற்ற மீனவர்களுக்கு மீன்கள் கிடைக்காமல் போகிறது. மீன்வளமும் குறையும் அபாயம் ஏற்படுகிறது.
இந்த நிலையில், புதுச்சத்திரம் அருகே உள்ள சாமியார்பேட்டை கடலில் புதுவை, பணித்திட்டு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் வியாழக்கிழமை 5 படகுகளில் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடித்தனர். இதையறிந்த சாமியார்பேட்டை மீனவ மக்கள் திரண்டு சென்று, சுருக்குமடி வலையில் மீன்பிடித்த புதுச்சேரி பணித்திட்டு பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (35), சசிகுமார் (42), நாகலிங்கம் (53), பாலாஜி (24) உள்ளிட்ட 19 பேரை 5 படகுகளுடன் சிறைபிடித்து கரைக்கு கொண்டு வந்தனர். மேலும் அவர்களிடமிருந்து மீன்கள், வலைகளை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர் அமுதா, மீன்வளத் துறை உதவி இயக்குநர் ரம்யா, புவனகிரி வட்டாட்சியர் சத்யன் மற்றும் கடலோரக் காவல் படை ஆய்வாளர் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இரு தரப்பு மீனவர்களையும் சமரசப்படுத்தி படகுகள், வலைகளை பறிமுதல் செய்தனர். புதுவை மீனவர்களை விடுவித்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...