கடலூர் மக்களவைத் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 41 மனுக்களில் 18 மனுக்களும், சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 25 மனுக்களில் 10 மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.
கடலூர் மக்களவைத் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19- ஆம் தேதி தொடங்கி 26- ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், திமுக, பாமக மற்றும் சுயேச்சைகள் உள்பட 35 பேர் 41 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து, புதன்கிழமை வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான வெ.அன்புச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. பொதுப் பார்வையாளர் கணேஷ் பி.பாட்டீல் முன்னிலை வகித்தார்.
அப்போது, வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவுடன் இணைத்திருந்த ஆவணங்கள், முன்மொழிவு செய்தவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா, வழக்குகள் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை ஆய்வு செய்தனர். இதில், சில வேட்பாளர்களின் மனுவில் போதுமான ஆவணங்கள் இல்லாத காரணத்தால், அவை நிராகரிக்கப்பட்டன.
இதுகுறித்து மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலர் வெ.அன்புச்செல்வன் கூறியதாவது: மாவட்டத்தில் 41 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. போதுமான ஆவணங்கள் இல்லாத காரணத்தால் 18 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 23 மனுக்கள் ஏற்கப்பட்டன. மனுக்களை திரும்பப் பெறுவதற்கு வெள்ளிக்கிழமை (மார்ச் 29) கடைசி நாளாகும் என்றார் அவர்.
ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ராஜகிருபாகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ச.சந்தோஷினிசந்திரா, தேர்தல் வட்டாட்சியர் ப.பாலமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சிதம்பரத்தில்...: சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட 25 வேட்புமனுக்களில் 15 மனுக்கள் ஏற்கப்பட்டு, 10 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜயங்கொண்டம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக 25 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இதைத் தொடர்ந்து, அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், அந்த மனுக்கள் மீது சிதம்பரம் மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான மு.விஜயலட்சுமி தலைமையில், தேர்தல் பொதுப் பார்வையாளரும், மகாராஷ்டிர மாநில பழங்குடியின மேம்பாட்டு ஆணையருமான கே.ஹெச்.குல்கர்னி முன்னிலையில் புதன்கிழமை பரிசீலனை நடைபெற்றது.
தாக்கல் செய்யப்பட்டிருந்த 25 மனுக்களில் அதிமுக (மாற்று வேட்பாளர்) அமமுக, சுயேச்சைகள் தாக்கல் செய்திருந்த மாற்று வேட்பாளர்களின் 10 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, அதிமுக வேட்பாளர் பொ.சந்திரசேகர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தொல்.திருமாவளவன், அமமுக வேட்பாளர் ஆ.இளவரசன், மக்கள் நீதி மய்ய வேட்பாளர் தி.ரவி மற்றும் சுயேச்சைகள் உள்ளிட்ட 15 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன.
மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட வேட்பாளர்களுக்கு வெள்ளிக்கிழமை (மார்ச் 29) சின்னங்கள் ஒதுக்கீடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் என தேர்தல் நடத்தும் அலுவலர் மு.விஜயலட்சுமி தெரிவித்தார்.
வேட்புமனுக்கள் பரிசீலனையின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் பொற்கொடி, அரியலூர் கோட்டாட்சியர் நா.சத்தியநாராயணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தா.பரிதாபானு, தேர்தல் தனி வட்டாட்சியர் சந்திரசேகரன், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள், பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கடலூர் தொகுதியில் 23 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு
கடலூர் மக்களவைத் தொகுதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பாளர்களின் பட்டியலை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் வெ.அன்புச்செல்வன் வெளியிட்டார்.
அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளின் வேட்பாளர்களாக டிஆர்விஎஸ்.ரமேஷ் (திமுக), ச.ஜெயபிரகாஷ் (பகுஜன் சமாஜ்) ஆகியோர் மனு ஏற்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களாக வி.அண்ணாமலை (மக்கள் நீதி மய்யம்), சி.குப்புசாமி (அகில ஊழல் தடுப்பு இயக்கம்), இரா.கோவிந்தசாமி (பாமக), ர.சித்ரா (நாம் தமிழர் கட்சி), ம.பாவாடை என்ற ராஜா (அகில இந்திய மக்கள் கழகம்), மு.ரகுநாதன் (இளந்தமிழர் முன்னணி கழகம்) ஆகியோர் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. சுயேச்சை வேட்பாளர் களாக சு.ராசமோகன், த.சங்கர், ம.சத்தியசீலன், து.செந்தாமரைகண்ணன், கா.தங்கவேல், சு.தனசேகரன், ஆ.தமிழரசி, அ.மணிகண்டன், ச.மதிப்பிரியா, அ.மாரிமுத்து, ஆ.மூவேந்தன், கோ.ராமன், அ.ஜெயமணி, கி.ஹேமந்த்குமார் ஆகியோரது மனுக்கள் ஏற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.