மக்களவைத் தேர்தல் பிரசாரத்துக்காக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை (மார்ச் 29) குறிஞ்சிப்பாடிக்கு வரவுள்ளார். இதையடுத்து, விழுப்புரம் சரக டிஐஜி. சந்தோஷ்குமார் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு ஏப். 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. ஏப். 16 தேர்தல் பிரசாரத்துக்கான கடைசி நாளாகும்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியினர் தங்களது மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.
அந்த வகையில், தமிழக முதல்வர் எடிப்பாடி கே.பழனிசாமி, தனது தேர்தல் பிரசாரத்தை கடலூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 29) தொடங்கவுள்ளார். அன்று மாலை 4 மணி அளவில் பண்ருட்டியில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கடலூர் மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் கோவிந்தசாமியை ஆதரித்து அவர் பிரசாரம் செய்கிறார்.
தொடர்ந்து, நெல்லிக்குப்பம், கடலூர், குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி, வடலூர் பகுதியில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
அந்த வகையில், குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் பகுதியில் முதல்வர் பிரசாரம் செய்ய இருப்பதால், பேருந்து நிலையம், முக்கிய சாலைகளில் பாதுகாப்புப் பணிகள் குறித்து விழுப்புரம் சரக டிஐஜி. சந்தோஷ்குமார் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன், நெய்வேலி காவல் துணைக் கண்காணிப்பாளர் எம்.லோகநாதன், காவல் ஆய்வாளர்கள் ரவீந்திரராஜ் (நெய்வேலி), ராமதாஸ் (குறிஞ்சிப்பாடி) ஆகியோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.