பல்வேறு அமைப்பினரிடம் ஆதரவு திரட்டிய தொல்.திருமாவளவன்
By DIN | Published On : 30th March 2019 08:57 AM | Last Updated : 30th March 2019 08:57 AM | அ+அ அ- |

திமுக கூட்டணி சார்பில் சிதம்பரம் மக்களவை (தனி) தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரும், விசிக தலைவருமான தொல்.திருமாவளவன், சிதம்பரம் நகரில் வர்த்தகர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பு நிர்வாகிகளை வியாழக்கிழமை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
சிதம்பரம் நகரில் வர்த்தகர் சங்கம், வாணியர் பேரவை, நாடார் சங்கம், மார்க்கெட் உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு விஸ்வகர்ம முன்னேற்றச் சங்கம், ஆரிய வைஸ்ய சங்கம், ஜெயின் சங்கம், முஸ்லீம் லீக் மற்றும் ஜமாத் நிர்வாகிகள், முதலியார் சங்கம், கார்காத்த வேளாளர் சங்கம், கட்டட தொழிலாளர்கள் சங்கம், மருத்துவ குல சங்கம், மார்க்கெட் தொழிலாளர்கள் சங்கம் ஆகிய சங்கங்களின் நிர்வாகிகளை வேட்பாளர் தொல்.திருமாவளவன், முன்னாள் அமைச்சரும், மாவட்ட திமுக செயலருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துடன் இணைந்து நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்போது, பானை சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாடு விஸ்வகர்ம முன்னேற்றச் சங்க மாநிலத் தலைவர் ஜி.சேகர், சிதம்பரம் பகுதியில் கவரிங் பூங்கா அமைக்க நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என வேட்பாளர் திருமாவளவனிடம் கோரிக்கை விடுத்தார். மேலும், திமுக கூட்டணிக்கு தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளிலும் விஸ்வகர்மா முன்னேற்றச் சங்கம் ஆதரவு தருவதாக உறுதியளித்து கடிதம் அளித்தார்.
நிகழ்ச்சியில் விசிக தொகுதி பொறுப்பாளர் வன்னியரசு, வ.க.செல்லப்பன், மாவட்ட செயலர் பால.அறவாழி, திமுக நகரச் செயலர் கே.ஆர்.செந்தில்குமார், துணைச் செயலர் பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் த.ஜேம்ஸ் விஜயராகவன், நகர பொருளாளர் ஜாபர்அலி, அப்பு சந்திரசேகரன் உள்ளிட்டோர் வேட்பாளருடன் சென்று ஆதரவு திரட்டினர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...