பெண்கள் பாதுகாப்பு குறித்து மு.க.ஸ்டான் பேசுவது வேடிக்கை: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி
By DIN | Published On : 30th March 2019 09:04 AM | Last Updated : 30th March 2019 09:04 AM | அ+அ அ- |

பெண்கள் பாதுகாப்பு குறித்து மு.க.ஸ்டாலின் பேசுவது வேடிக்கையாக உள்ளது என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
அதிமுக கூட்டணி சார்பில் கடலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் இரா.கோவிந்தசாமியை ஆதரித்து கடலூர் மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்த வேனில் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் அவர் பேசியதாவது:
நமது நாட்டின் வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாத சில அன்னிய சக்திகள், பயங்கரவாதிகள் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். இதை திறமையான பிரதமரால்தான் முறியடிக்க முடியும். இந்த நடவடிக்கையை சிறப்பாகச் செய்து வருபவர் பிரதமர் நரேந்திர மோடி. எனவே, வளர்ச்சிப் பணிகள் தொடர வேண்டுமெனில் மீண்டும் மோடி பிரதமராக தேர்வு செய்யப்பட வேண்டும்.
அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என மு.க.ஸ்டாலின் கூறுகிறார். 1990-ஆம் ஆண்டில் எதிர்க் கட்சித் தலைவராக ஜெயலலிதா இருந்தபோது அவர் சட்டப் பேரவையில் அப்போதைய முதல்வர் கருணாநிதி முன்னிலையிலேயே தாக்கப்பட்டார். இவர்கள்தான் தற்போது பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசுகிறார்கள். நாட்டிலேயே அதிமுக அரசுதான் சட்டம் ஒழுங்கை சிறப்பாகப் பாதுகாத்து வருகிறது. இந்தியாவிலுள்ள 15 ஆயிரம் காவல் நிலையங்களில் கோவை மாவட்டம், ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் சிறந்ததாகத் தேர்வாகியுள்ளது.
படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்த உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி, ரூ.3 லட்சம் கோடி முதலீட்டைப் பெற்றுள்ளோம். இதில் 304 தொழில் நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன. இதன்மூலம், நேரடியாக 5 லட்சம் பேருக்கும், மறைமுகமாக 10 லட்சம் பேருக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளோம்.
பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு தலா ரூ.ஆயிரம் வழங்கியது. அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை தடுக்க திமுக முயன்றது. எனினும், தேர்தலுக்குப் பிறகு அந்தத் தொகை வழங்கப்படும். நகரத்தில் வசிக்கும் ஏழைகளுக்கு 7 லட்சம் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டித் தரப்படும். 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை நாள்கள் 200-ஆக உயர்த்தப்படும் என்றார் முதல்வர்.
பிரசாரத்தில் பாமக தலைவர் கோ.க.மணி, மாநில தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பண்ருட்டியில்... முன்னதாக, பண்ருட்டி நான்கு முனைச் சந்திப்பில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
அதிமுக தலைவர்கள், கூட்டணிக் கட்சியினர் செல்லும் இடங்களில் கூட்டம் இல்லை என மு.க.ஸ்டாலின் கூறுகிறார். நமது கூட்டணி பலமான கூட்டணி.
மக்கள் மத்தியில் செல்வாக்குள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளோம்.
2006-11-இல் திமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் கடுமையான மின் வெட்டு பிரச்னை இருந்தது.
2011-ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் ஜெயலலிதாஅளித்த வாக்குறுதியின்படி மின் உற்பத்தித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு தற்போது தமிழகம் மின்மிகை மாநிலமாக உள்ளது. இதற்காக தேசிய அளவில் பரிசு பெற்றுள்ளோம்.
வேளாண்மை, உணவு தானிய உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
நீர் மேலாண்மைத் திட்டத்தின் கீழ் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் மூலம் 200 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும் என்றார் முதல்வர்.
பிரசாரத்தில் பண்ருட்டி எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...