கடலூரில் உள்ள அரசு இசைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான கோடை கால கலைப் பயிற்சி முகாம் வருகிற 6-ஆம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து மாவட்ட அரசு இசைப் பள்ளி சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டுத் துறை, மண்டல கலைப் பண்பாட்டு மையம், மாவட்ட சவகர் சிறுவர் மன்றங்கள் மூலமாக குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கராத்தே, சிலம்பம் போன்ற கலைப் பயிற்சிகள் 5 முதல் 16 வயது வரையிலான சிறுவர், சிறுமிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்தப் பயிற்சியானது திங்கள், புதன்கிழமைகளில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை கடலூர் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கோடை விடுமுறையை சிறுவர், சிறுமிகள் பயனுள்ள வகையில் கழிக்கும் விதமாக மாவட்ட சவகர் சிறுவர் மன்றத்தில் வருகிற 6-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் 15-ஆம் தேதி வரை குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கராத்தே, சிலம்பம் ஆகிய கலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்தப் பயிற்சி காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை அளிக்கப்படுகிறது. பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பயிற்சி பெற்றமைக்கான சான்றிதழ்கள் முகாம் நிறைவு நாளில் வழங்கப்படும். பயிற்சியில் சேர விருப்புவோர் கடலூரில் கிளை சிறைச்சாலை சாலையில் உள்ள மாவட்ட பத்திரப் பதிவு அலுவலகத்தின் பழைய அலுவலகக் கட்டடத்தில் அமைந்துள்ள மாவட்ட அரசு இசைப் பள்ளியில் நேரடியாகச் சென்று பதிவு செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.