பெண் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்
By DIN | Published On : 05th May 2019 11:57 PM | Last Updated : 05th May 2019 11:57 PM | அ+அ அ- |

சாராயம் கடத்தியவருக்கு சாதகமாக செயல்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், கடலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு பெண் காவல் ஆய்வாளர் உள்பட 2 பேர் ஞாயிற்றுக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
கடலூர் அருகே சின்னகங்கணாங்குப்பத்தில் கடந்த ஜனவரி 9-ஆம் தேதி சிறப்புப் படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, புதுச்சேரியில் இருந்து காரில், சாராயம், மதுப்புட்டிகளை கடத்தி வந்த விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள ஓடைக்காடு பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் (25) என்பவரை பிடித்தனர். கடத்திய காரையும், அதிலிருந்த 250 லிட்டர் சாராயம், 190 மதுப் புட்டிகளையும் கடலூர் மதுவிலக்கு அமல்பிரிவு ஆய்வாளர் எஸ்.லதாவிடம் ஒப்படைத்தனர்.
இதுதொடர்பாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து முத்துக்குமாரை கைது செய்தனர். ஆனால், இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் காவல் ஆய்வாளர் எஸ்.லதா பிணையில் விடுவித்தார். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட மதுப்புட்டிகள், கார் ஆகியவற்றையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவில்லையாம். இதுகுறித்து எழுந்த புகாரையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் விசாரணை நடத்தி, விழுப்புரம் சரக காவல் துறை துணைத் தலைவர் சந்தோஷ்குமாருக்கு அறிக்கை அனுப்பினார். அதனடிப்படையில் காவல் ஆய்வாளர் எஸ்.லதா, எழுத்தர் சுப்பிரமணியன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...