வெள்ளிக் கடற்கரையில் தூய்மைப் பணி
By DIN | Published On : 05th May 2019 12:07 AM | Last Updated : 05th May 2019 12:07 AM | அ+அ அ- |

கடலூர் வெள்ளிக் கடற்கரையில் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தலைமையில் சனிக்கிழமை தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.
கோடை விடுமுறையை முன்னிட்டும், கத்திரி வெயிலின் தாக்கத்திலிருந்து ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும் கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரைக்கு திரளானோர் வந்து செல்கின்றனர்.
வழக்கமாக, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே வெள்ளிக் கடற்கரையில் அதிக கூட்டம் காணப்படும் நிலையில் தற்போது சாதாரண நாள்களில் அதிகமான கூட்டம் காணப்படுகிறது.
இந்தக் கடற்கரையில் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் அண்மையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பொதுமக்களிடம் அங்குள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அதில், தூய்மையைப் பராமரிக்காதது, போதுமான அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்து புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சனிக்கிழமை காலையில் கடலூர் நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் சுமார் 450 பேர் இணைந்து வெள்ளிக் கடற்கரைப் பகுதிகளில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டனர்.
இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தொடக்கி வைத்து, அவரும் சுற்றுப் பகுதியில் குப்பைகளை அள்ளினார்.
மேலும், கடற்கரைப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளதை மாற்றி, புதிதாக விளையாட்டு உபகரணங்கள் அமைக்க நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து கடற்கரை அருகே உள்ள படகு சவாரி நிலையத்தை பார்வையிட்ட ஆட்சியர், பொதுமக்கள் படகு சவாரி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
கடலூர் சார்-ஆட்சியர் கே.எம்.சரயூ, நகராட்சி ஆணையர் (பொ) ப.அரவிந்த் ஜோதி, சுகாதார ஆய்வாளர்கள் பாக்கியநாதன், மணிவண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...