வரதட்சிணை கொடுமை: விரிவுரையாளர் கைது
By DIN | Published On : 19th May 2019 09:46 AM | Last Updated : 19th May 2019 09:46 AM | அ+அ அ- |

வரதட்சிணை கேட்டு மனைவியை கொடுமை செய்ததாக தனியார் கல்லூரி விரிவுரையாளரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
கடலூரை அடுத்துள்ள காராமணிக்குப்பம், ராஜாராம் நகரில் வசிப்பவர் சண்முகவேல். இவரது மகள் மகேஸ்வரிக்கும் (26), பண்ருட்டியை அடுத்துள்ள கட்டியாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தேவநாதன் மகன் பெரியழகன் (32) என்பவருக்கும் 17.6.2018 அன்று திருமணம் நடைபெற்றது. பெரியழகன் கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், 20 சவரன் தங்க நகை, கார் வேண்டும் எனக் கேட்டு மகேஸ்வரியை அவரது கணவர் பெரியழகன், மாமியார் செந்தாமரை, மாமனார் தேவநாதன் மற்றும் நாராயணன்
ஆகியோர் உடல் மற்றும் மனதளவில் கொடுமைப்படுத்தினராம். இதுகுறித்து மகேஸ்வரி அளித்த புகாரின்பேரில் போலீஸார் பெரியழகனை வெள்ளிக்கிழமை கைது செய்தனர். மேலும், தலைமறைவான செந்தாமரை, தேவநாதன், நாராயணன் ஆகியோரை தேடி வருகின்றனர்.