வாக்கு எண்ணிக்கை: முன்னேற்பாடுகள் தீவிரம்
By DIN | Published On : 19th May 2019 09:49 AM | Last Updated : 19th May 2019 09:49 AM | அ+அ அ- |

கடலூர் மக்களவைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த ஏப்.18-ஆம் தேதி நடைபெற்றது. இதில், கடலூர் மக்களவைத் தொகுதியில் உள்ள கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் வாக்குப் பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு இயந்திரங்கள் கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணிக்கை வருகிற 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. கடலூர் தொகுதியில்வாக்கு எண்ணும் பணிக்காக 102 தேர்தல் மேற்பார்வையாளர்கள், 102 உதவியாளர்கள் என மொத்தம் 204 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் வாக்கு எண்ணிக்கை நாளன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த பயிற்சி வகுப்பு கடலூர் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தலைமையில், மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், கடலூர் பெரியார் அரசுக் கலைக் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான உபகரணங்கள் வந்திறங்கின. கடலூர் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட 6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குகள் தனித் தனி அறைகளில் எண்ணப்பட உள்ளன. இதற்காக ஒவ்வொரு அறையிலும் சுமார் 14 மேஜைகள் அமைக்கப்பட உள்ளன. இதை கண்காணித்திட (சிசிடிவி) கேமராக்கள் பொருத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்தப் பணிகள் அனைத்தும் வருகிற 20-ஆம் தேதிக்குள் நிறைவடையும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் ஆய்வு செய்தார்.