ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்த வலியுறுத்தி சிதம்பரம் நடராஜர் கோயிலில் விவசாயிகள் வழிபாடு
By DIN | Published On : 19th May 2019 09:49 AM | Last Updated : 19th May 2019 09:49 AM | அ+அ அ- |

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் விவசாயிகள், சிதம்பரம் நடராஜர் கோயிலில் சுவாமியிடம் சனிக்கிழமை முறையீடு செய்து வழிபட்டனர்.
கடலூர், நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, சிதம்பரத்தில் அனைத்து விவசாய சங்க நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பங்கேற்ற ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர் எஸ்.ரவீந்திரன் தலைமை வகித்துப் பேசியதாவது:
கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், பிச்சாவரம் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக 274 கிணறுகள் தோண்டப்பட உள்ளன. இதனால், இந்தப் பகுதியில் விவசாயம், நிலத்தடி நீர் முற்றிலும் பாதிக்கப்படும்.
குறிப்பாக, பிச்சாவரத்தில் உள்ள அலையாத்தி (மாங்குரோவ்) காடுகள் முற்றிலும் அழியும் நிலை உருவாகியுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயிலின் ஸ்தல விருட்சமான மூலிகை குணம் கொண்ட தில்லைமரமும் இந்தத் திட்டத்தால் அழியும் வாய்ப்புள்ளது.
எனவே கடலூர், நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட
வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம், போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளோம் என்றார் அவர்.
கூட்ட முடிவில் விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுமார் 50 பேர் இணைந்து ஊர்வலமாகச் சென்று நடராஜர் கோயிலை அடைந்தனர். அங்கு, கோயிலின் ஸ்தல விருட்சமான தில்லைமரம் அழிவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி அதன் கிளைகளை தட்டில் வைத்து நடராஜப் பெருமானிடம் முறையிட்டு வழிபட்டனர். பொது தீட்சிதர்கள் தில்லைமரத்தின் கிளைகளை நடராஜப் பெருமானிடம் வைத்து பூஜை செய்து விவசாயிகளுக்கு பிரசாதம் வழங்கினர்.
முன்னதாக, கூட்டத்தில் விவசாய சங்கத் தலைவர்கள் கே.வி.இளங்கீரன், கார்மாங்குடி வெங்கடேசன், சேத்தியாத்தோப்பு வெங்கடேசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பி.கற்பனைச்செல்வம், தமிழக உழவர் முன்னணி சார்பில் ஆ.குபேரன், கணேசன், சமூக ஆர்வலர்கள் நீதிமணி, பெரியார் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.