வதிஷ்டபுரம் பெருமாள் கோயில் தேரோட்டம்
By DIN | Published On : 19th May 2019 09:48 AM | Last Updated : 19th May 2019 09:48 AM | அ+அ அ- |

திட்டக்குடி அருகே வதிஷ்டபுரத்தில் அமைந்துள்ள திருமகிழ்ந்தவள்ளி சமேத ரங்கநாதசுவாமி கோயில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த கோயிலில் வைகாசி விசாக பிரம்மோத்ஸவ விழா கடந்த
10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பெருமாள் விழா நாள்களில் ரங்கநாயகி தாயார், வெங்கடாஜலபதி, காளிங்கநர்த்தனம், சரஸ்வதி, லட்சுமி, மோகினி மற்றும் வெண்ணெய்தாழி கிருஷ்ணன் ஆகிய அலங்காரங்களில் காட்சியளித்தார்.
மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தார். விழாவில் கடந்த 16-ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெற்றது. பிரமோத்ஸவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. பெருமாள் திருத் தேரில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்தார். திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற தேர் மீண்டும் நிலையை அடைந்தது.
விழாவில், ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் தீர்த்தவாரி மகா அபிஷேகமும், மாலை 3 மணியளவில் துவாதச ஆராதனம், புஷ்பயாகமும், இரவு 7 மணிக்கு புஷ்ப பல்லக்கில் வீதி உலா ஆகியவை நடைபெற உள்ளன. திங்கள்கிழமை காலை 8 மணியளவில் விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் செய்துள்ளனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...