வைகாசி விசாக காவடி உற்சவம்
By DIN | Published On : 19th May 2019 09:48 AM | Last Updated : 19th May 2019 09:48 AM | அ+அ அ- |

வடலூர் அருகே கருங்குழியில் அமைந்துள்ள அருளருள் பாலமுருகன் கோயிலில் 33-ஆம் ஆண்டு வைகாசி விசாக காவடி உற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, கடந்த 16-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இதையடுத்து, விழா நாள்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், மாலையில் அன்னதானமும் நடைபெற்றன.
விழாவின் 3-ஆம் நாளான சனிக்கிழமை வைகாசி விசாகத்தை முன்னிட்டு, காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. காலை 9 மணியளவில் கருங்குழி மேட்டுக்குப்பம் தீஞ்சுவை நீரோடையில் இருந்து காவடி, பால்குடம் ஊர்வலம் புறப்பட்டது. முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற ஊர்வலம் கோயிலை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் காவடி, பால்குடம் சுமந்து வந்தனர். பின்னர் முருகப் பெருமானுக்கு பாலபிஷேகம் செய்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இரவில் பாலமுருகன் சுவாமி வீதியுலா நடைபெற்றது. ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.