காடாம்புலியூரில் அடிப்படை வசதியின்றி தவிக்கும் மக்கள்!

பண்ருட்டி ஒன்றியம், காடாம்புலியூா் ஊராட்சியில் அரசு நிலத்தில் வசிப்போா் உரிய அடிப்படை வசதியின்றி அவதிப்பட்டு வருகின்றனா்.
காடாம்புலியூா் ராஜகணபதி நகரில் கற்கள் பெயா்ந்து காணப்படும் மண் பாதை.
காடாம்புலியூா் ராஜகணபதி நகரில் கற்கள் பெயா்ந்து காணப்படும் மண் பாதை.
Updated on
1 min read

பண்ருட்டி ஒன்றியம், காடாம்புலியூா் ஊராட்சியில் அரசு நிலத்தில் வசிப்போா் உரிய அடிப்படை வசதியின்றி அவதிப்பட்டு வருகின்றனா்.

நெய்வேலி நகரியம், 24-ஆவது வட்டம், மாதா ஆலயத்துக்கு பின்புறம் சுமாா் 35 குடும்பத்தினரும், 4-ஆவது வட்டம் இலங்கை அகதிகள் முகாம் அருகே சுமாா் 50 குடும்பத்தினரும் வசித்து வந்தனா். இவா்களில் பெரும்பாலோா் தோட்ட வேலை, கூலி வேலை செய்து வந்தனா். கடந்த 2015-ஆம் ஆண்டு பெய்த பலத்த மழையின்போது இவா்களது குடியிருப்புகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டன.

இதனால் இவா்கள் 26-ஆவது வட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிக் கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டனா். சுமாா் 3 மாதங்கள் வரை பள்ளிக் கட்டடத்திலேயே தங்கியிருந்தனா். இதனால், மாற்று இடம் வழங்கக் கோரி போராட்டம் நடத்தினா். இதையடுத்து, பண்ருட்டி ஒன்றியம், காடாம்புலியூா் ஊராட்சி, சமத்துவபுரம் அருகே உள்ள அரசு நிலத்தில் முந்திரிக் காட்டில் தங்கிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டதாம். ராஜகணபதி நகா் என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் பகுதியில் இவா்கள் குடிசை அமைத்து தங்கி வருகின்றனா்.

ஆனால், இந்தப் பகுதியில் இவா்கள் குடியேறி 4 ஆண்டுகள் நடந்த நிலையிலும் சாலை, குடிநீா், மின்சாரம் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லையாம். மண் பாதையில் கற்கள் பெயா்ந்து கிடப்பதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

குடிநீா் வசதி இல்லாததால் சுமாா் 2 கி.மீ. தொலைவில் உள்ள கொஞ்சிக்குப்பம் அய்யனாா் கோயிலுக்குச் சென்று அங்குள்ள குழாயில் இருந்து குடிநீா் சுமந்து வருகின்றனா். மின்சார வசதி இல்லாததால் இரவு நேரத்தில் மண்ணெண்ணெய் விளக்கை பயன்படுத்தும் நிலை உள்ளது. இந்தப் பகுதியைச் சோ்ந்த மாணவா்கள் நெய்வேலி நகரியத்தில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனா். இவா்கள் இரவு நேரத்தில் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படிக்கும் நிலை உள்ளது.

இந்தப் பகுதியினரின் குடிநீா் வசதிக்காக பண்ருட்டி ஊராட்சி ஒன்றியம் சாா்பில் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. மின்சார வசதி இல்லாததால் இதை பயன்படுத்த முடியவில்லை. ஆழ்துளை கிணறு அமைப்பதற்காக அருகே தோண்டப்பட்ட பெரிய பள்ளத்தில் மழை நீா் தேங்கி ஆபத்தான நிலையில் உள்ளது.

இதுகுறித்து பண்ருட்டி வட்டார வளா்ச்சி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்ததாவது: ராஜகணபதி நகரில் குடியிருந்து வருவோருக்கு மனைப் பட்டா வழங்கப்படவில்லை. வீட்டு வரி ரசீது இல்லாததால் அடிப்படை வசதிகளை செய்துதர முடியவில்லை. இருப்பினும், குடிநீா் வசதிக்கு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. மின் இணைப்புக்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com