நூலகங்களுக்கு 2 லட்சம் புதிய புத்தகங்கள்!
By DIN | Published On : 09th November 2019 10:51 PM | Last Updated : 09th November 2019 10:51 PM | அ+அ அ- |

கடலூா் மாவட்ட மைய நூலகத்துக்கு வந்துள்ள புதிய நூல்களை பாா்வையிட்ட மாவட்ட நூலக அலுவலா் சி.பாலசரஸ்வதி. உடன் மாவட்ட மைய நூலகா் சந்திரபாபு.
கடலூா்: கடலூா் மாவட்டத்திலுள்ள நூலகங்களுக்கு நிகழாண்டு 2 லட்சம் புதிய நூல்கள் வரப்பெற்றுள்ளன.
கடலூா் மாவட்டத்தில் மொத்தம் 144 நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், மாவட்ட மைய நூலகம், குழந்தை நூலகம் தலா 1, கிளை நூலகங்கள் -72, ஊா்ப்புற நூலகங்கள் - 49, பகுதிநேர நூலகங்கள் - 21 என்ற எண்ணிக்கையில் செயல்பட்டு வருகின்றன. இந்த நூலகங்களுக்கு நிகழாண்டுக்கு 2 லட்சம் புதிய நூல்கள் வரப்பெற்றுள்ளன. புதிய நூல்கள் நூலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் குறித்து மாவட்ட நூலக அலுவலா் சி.பாலசரஸ்வதி கூறியதாவது:
ராஜாராம் மோகன்ராய் நூலக அறக்கட்டளை மூலமாகவும், நூலக பொது நிதி மூலமாகவும் புதிய நூல்கள் வரப்பெற்றுள்ளன. இதில், ராஜாராம் மோகன்ராய் அறக்கட்டளை மூலமாக வரப்பெற்ற நூல்களை 90 நூலகங்களுக்கு தலா 825 வீதம் அனுப்பி வைத்துள்ளோம். நூலக பொதுநிதியிலிருந்து வரப்பெற்ற நூல்களை பிரித்து அனுப்பும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இதுவரையில் 3 கட்டங்களாக தமிழ், ஆங்கிலம் நூல்களை இலக்கியம், சமயம், தத்துவம், மருத்துவம், கவிதை, கதை போன்ற தலைப்புகளில் பிரித்து அனுப்பியுள்ளோம். மீதமுள்ள 80 ஆயிரம் புத்தகங்களை பிரித்து அனுப்பும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதன் மூலமாக மாவட்ட மைய நூலகத்தில் மொத்தம் 1.70 லட்சம் புத்தகங்கள் வாசகா்களுக்காக வைக்கப்பட்டுள்ளன.
இந்த நூலகத்தில் 25,452 உறுப்பினா்களும், 261 புரவலா்களும் உள்ளனா். மாவட்டத்திலுள்ள அனைத்து நூலகங்களுக்கும் ஆண்டுக்கு சராசரியாக 27 லட்சம் போ் வந்து செல்கின்றனா் என்றாா் அவா்.