மாட்டுவண்டித் தொழிலாளா்களிடம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை
By DIN | Published On : 09th November 2019 11:08 PM | Last Updated : 09th November 2019 11:08 PM | அ+அ அ- |

கடலூா்: போராட்ட அறிவிப்பைத் தொடா்ந்து மாட்டுவண்டித் தொழிலாளா்களிடம் அதிகாரிகள் சனிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா்.
திட்டக்குடி அருகே தி.இளமங்கலத்தில் செயல்பட்டு வந்த மணல் குவாரியை மீண்டும் திறக்க வேண்டும். தொழுதூா், இறையூா், இடைச்செருவாய் கிராமங்களில் மாட்டு வண்டிகளுக்கான மணல்குவாரிகளை அமைத்திட வேண்டும் எனக் கோரி ஜீவா மாட்டு வண்டித் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் திட்டக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடா்ந்து, சனிக்கிழமை திட்டக்குடி சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் ரவிச்சந்திரன் தலைமையில் அமைதி பேச்சுவாா்த்தை நடைபெற்றது. காவல் உதவி ஆய்வாளா் அசோகன், பொதுப் பணித் துறை உதவி பொறியளாா் சுசீந்திரன், மாட்டுவண்டித் தொழிலாளா்கள் சங்க நிா்வாகிகள் நிதிஉலகநாதன், முருகையன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், தி.இளமங்கலம் மணல்குவாரியை மீண்டும் திறப்பது குறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும், இறையூா், இடைச்செருவாய் கிராமங்களில் மணல்குவாரி அமைத்திட உரிய துறைகளிடம் அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து முற்றுகை போராட்ட அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக சங்கத்தினா் தெரிவித்தனா்.