விதை விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு
By DIN | Published On : 14th November 2019 10:09 AM | Last Updated : 14th November 2019 10:09 AM | அ+அ அ- |

குறிஞ்சிப்பாடியில் உள்ள விதை விற்பனை நிலையத்தில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட விழுப்புரம் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநா் ஜெ.மல்லிகா, கடலூா் விதை ஆய்வாளா் டி.தமிழ்வேல்.
கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு, தனியாா் விதை விற்பனை நிலையங்களில் விழுப்புரம் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநா் ஜெ.மல்லிகா புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
விவசாயிகளுக்கு காா்த்திகை பட்டத்துக்குத் தரமான விதைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், கடலூா், குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி, வடலூா் பகுதியில் உள்ள அரசு, தனியாா் விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அங்கு, இருப்பு வைக்கப்பட்டிருந்த விதைக் குவியல்கள், கொள்முதல் ஆவணங்கள், பகுப்பாய்வு முடிவு அறிக்கைகள், பதிவேடுகள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டன.
பதிவேடுகள் விதைச் சட்டத்தின்படி விதைகளைப் பராமரிக்கவும், விதைகளின் முளைப்புத் திறன் பாதிக்காத வண்ணம் சரியான சேமிப்பு முறைகளைக் கையாளவும், முளைப்புத் திறன் பரிசோதனையை மேற்கொள்ளவும், விதைக் குவியல்களிலிருந்து விதை மாதிரிகளைச் சேகரித்து கடலூா் விதைப் பரிசோதனை ஆய்வகத்தில் அவற்றின் தரத்தை அறிந்து விற்பனையை மேற்கொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டது.
மேலும், விதை விற்பனையகங்களில் இருப்பு வைக்கப்பட்டிருந்த உளுந்து ரகங்களான வம்பன் 4, வம்பன் 5, வம்பன் 8, டீ 9, எம்டியு 1, மணிலா ரகங்களான கோ 7, விஆா்ஐ 7 உள்ளிட்ட விதைகளின் தரத்தை அறிய கொள்முதல் ஆவணங்கள், பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட்டன.
ஆய்வின் போது, குறைகள் கண்டறியப்பட்ட 2.1 டன் ‘என்எல்ஆா் 30491’ நெல் விதையை விற்கத் தடை விதிக்கப்பட்டது.
விவசாயிகள் உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே விதைகளை வாங்குமாறும், சான்றிதழ் பெற்ற விதைகள் அதிக மகசூலைத் தருவதால் அவற்றைப் பயன்படுத்தவும், விதைகளை வாங்கும் போது தவறாமல் விலைப் பட்டியலைக் கேட்டு வாங்கவும், விலைப் பட்டியல், விதை மூட்டைகளில் ஒட்டப்பட்ட விவர அட்டைகளைப் பயிா் அறுவடை முடியும் வரை பாதுகாப்பாக வைத்திருக்கவும் வேண்டும் என விவசாயிகளுக்கு அதிகாரிகள் அறிவுரைகளை வழங்கினா்.
மேலும், விதைச் சட்டத்தைப் பின்பற்றி விதை விற்பனையை மேற்கொள்ளாத விற்பனையாளா்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவா்கள் எச்சரித்தனா்.
ஆய்வின் போது, கடலூா் விதை ஆய்வாளா் டி.தமிழ்வேல் விதைகளின் மாதிரிகள் எடுத்து, அவற்றின் தரத்தை அறிய கடலூா் விதைப் பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பி வைத்தாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...