ஊராட்சிகளில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி பேரணி
By DIN | Published On : 01st September 2019 03:33 AM | Last Updated : 28th January 2020 04:53 PM | அ+அ அ- |

ஊராட்சி அலுவலகங்களில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி, கடலூரில் ஓட்சா கூட்டமைப்பு சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற பேரணியில் திரளானோர் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்கம் (ஓட்சா கூட்டமைப்பு) சார்பில் வாழ்வாதார கோரிக்கை மாநாடு மற்றும் பேரணி கடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. கடலூர் உழவர் சந்தை அருகே தொடங்கிய பேரணி மாநாடு நடைபெறும் நகர அரங்கில் நிறைவடைந்தது. பேரணியில் திரளானோர் கலந்து கொண்டனர்.
மாநாட்டு நிகழ்ச்சிகளுக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ராமர் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் டி.சாமிதுரை, கே.ராஜேந்திரன், வை.பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓட்சா கூட்டமைப்பு தலைவர் எம்.அமல்ராஜ் கோரிக்கைகள் குறித்து விளக்கவுரையாற்றினார். கூட்டமைப்பு மேற்கொண்டுள்ள வியூகங்கள் குறித்து மாநில பிரசார செயலர் பெ.ஆனந்ததுரை உரையாற்றினார்.
பின்னர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ராமர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அனைவருக்கும் காலமுறை ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். தூய்மை காவலர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.13,600
வழங்க வேண்டும். பணி ஓய்வு கால பணிக்கொடையாக ரூ.ஒரு லட்சம், ஓய்வூதியமாக மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். பணியாளர் மரணம் அடைந்தால் குடும்பத்தில் உள்ள நபருக்கு வாரிசு அடிப்படையில் கல்வித் தகுதிக்கேற்ப பணி வழங்க வேண்டும்.
கிராம ஊராட்சிகளில் காலியாக உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இயக்குபவர் மற்றும் துப்புரவு பணியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
கடந்த 2000-ஆம் ஆண்டுக்கு பின்னர் பணி நியமனம் செய்யப்பட்ட நீர்தேக்கத் தொட்டி இயக்குபவர்களின் பெயர் இணையத்தில் விடுபட்டுள்ளதை அரசு உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என்றார் அவர். மாநாட்டு நிறைவில் மாவட்ட துணைத் தலைவர் பூமணி நன்றி கூறினார்.