பிறப்பு, இறப்புச் சான்றுகளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்யலாம்: சுகாதாரத் துறை
By DIN | Published On : 01st September 2019 03:34 AM | Last Updated : 01st September 2019 03:34 AM | அ+அ அ- |

பிறப்பு, இறப்புச் சான்றிதழ்களை பொதுமக்கள் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று கடலூர் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் ஆர்.கீதா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் முழுவதும் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜனவரி முதல் அனைத்து பிறப்பு, இறப்புப் பதிவுகளும் ஒரே மென்பொருளில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதை பொதுமக்கள் இணையதளம் மூலம் கட்டணமின்றி எத்தனை பிரதிகள் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பிறப்புச் சான்றிதழ் குழந்தையின் முதல் உரிமை. எனவே, கர்ப்பிணிகள் பிரசவத்துக்காக மருத்துவமனைக்குச் செல்லும்போது, கிராம மற்றும் நகர சுகாதார செவிலியரிடம் பதிவு செய்து பெற்ற பிரத்யேக 12 இலக்க பேறுசார் மற்றும் குழந்தை நல அடையாள எண், ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை நகல் ஆகிய விவரங்களை அளிக்க வேண்டும்.
அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கும் பிறப்பு, இறப்பு நிகழ்வு குறித்த தகவல்களை அளித்திட ஒவ்வொரு மருத்துவமனைக்கும் தனிப்பட்ட பயனர் "ஐடி' கொடுக்கப்பட்டுள்ளது.
அதன் மூலம் தகவலானது சம்பந்தப்பட்ட பிறப்பு, இறப்பு பதிவாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவை சரிபார்க்கப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. மேலும், அரசு மருத்துவமனைகளில் நிகழக்கூடிய பிரசவங்களுக்கு அந்தக் குழந்தையின் தாய் மருத்துவமனையை விட்டுச் செல்லும் முன்பாக பிறப்பு சான்றிதழ் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை வளாகத்திலேயே அமைந்துள்ள மையங்களில் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
வீடுகளில் நிகழும் பிறப்பு, இறப்புகள் குறித்த தகவல்களை அந்தப் பகுதிக்கு உள்பட்ட பதிவாளரிடம் அளித்து பதிவு மேற்கொள்ளலாம். ட்ற்ற்ல்://ஸ்ரீழ்ள்ற்ய்.ர்ழ்ஞ் என்ற இணையதள முகவரியில் பிறப்பு, இறப்புச் சான்றிதழை கட்டணமின்றி பதிவிறக்கம் செய்யலாம். அதிலுள்ள "க்யூஆர் கோட்' சான்றிதழின் நம்பகத்தன்மையை உறுதி செய்கிறது. 2018-ஆம் ஆண்டுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
2018-ஆம் ஆண்டு முதல் மென்பொருளில் பதிவு செய்யப்பட்டு, இணையதளம் மூலம் வழங்கப்படும் சான்றிதழ்கள் மட்டுமே செல்லத்தக்கதாகும் என்று அதில் தெரிவித்துள்ளார்.