வங்கிகள் இணைப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 01st September 2019 03:35 AM | Last Updated : 01st September 2019 03:35 AM | அ+அ அ- |

வங்கிகள் இணைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடலூரில் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கக் கூட்டமைப்பினர் சனிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசானது பல்வேறு பொதுத் துறை வங்கிகளை இணைத்து வெள்ளிக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டது.
இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் கடலூரில் இந்தியன் வங்கியின் மண்டல அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்கத் தலைவர் எஸ்.மீரா தலைமை வகித்தார். இந்தியன் வங்கி ஓய்வூதியர் சங்கத் தலைவர் கே.திருமலை முன்னிலை வகித்தார்.
வங்கி ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட உதவித் தலைவர் ரமணி தொடக்க உரையாற்றினார். பொதுச் செயர் எஸ்.ஸ்ரீதரன் போராட்ட உரையாற்றினார். செயலர் ஆர்.குருபிரசாத், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் முன்னாள் மாவட்டச் செயலர் ஜி.ராஜமாணிக்கம், கடலூர் தாலுகா வங்கி ஊழியர்கள் சங்கத் தலைவர் வி.லட்சுமணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலர் மு.மருதவாணன் நிறைவுரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில், ஏற்கெனவே 27 பொதுத் துறை வங்கிகள் இருந்த நிலையில் அதை பல்வேறு வங்கிகளுடன் இணைத்து 12 வங்கிகளாக மத்திய அரசு மாற்றிவிட்டது.
இந்த நடவடிக்கையால் எந்தவித பலனும் ஏற்படப்போவதில்லை என்பதை கடந்த காலங்களிலேயே மத்திய அரசு உணர்ந்துவிட்டது. எனவே,
வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.