சாலை விரிவாக்கத்தின்போது பாலம் சேதம்
By DIN | Published On : 02nd September 2019 03:29 AM | Last Updated : 02nd September 2019 03:29 AM | அ+அ அ- |

திட்டக்குடி - ராமநத்தம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியின் போது சேதமடைந்த பாலத்துக்குப் பதிலாக புதிய பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
திட்டக்குடி - ராமநத்தம் செல்லும் சாலையில் உள்ளது தி.இளமங்கலம். இந்தச் சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தச் சாலை குறுகியதாக இருப்பதால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தன. இதனால், இந்தச் சாலையை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தி, அதற்காக ரூ. 49 கோடி ஒதுக்கீடு செய்து சாலை விரிவாக்காகப் பணி நடைபெற்று வருகிறது.
இதற்காக, இருபுறமும் பள்ளம் தோண்டப்பட்டு விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதன்படி, தி.இளமங்கலத்தில் உள்ள சிறுபாலத்தின் அருகே இருபுறமும் தோண்டிவிட்டு, அதில் சிமென்ட் குழாய்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பாலத்தின் வழியாக அருகிலுள்ள கீழ்ச்செருவாய் ஏரி நிரம்பும் போது கடைகால் வழியாக வரும் உபரிநீர் அந்தப் பாலத்தின் வழியாக திருப்பி விடப்பட்டு இளமங்கலம் ஏரிக்குச் செல்கிறது.
போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்ததுடன், தண்ணீரை எடுத்துச் செல்வதிலும் இந்தப் பாலம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
ஆனால், சாலை விரிவாக்கத்தின் போது, பாலத்தின் அடிப்பகுதியில் அமைந்துள்ள சிமென்ட் குழாய்கள் சேதமடைந்து பாலத்தின் அடிப்பகுதி உள்வாங்கிய நிலையில் உள்ளது. இதனால், பாலம் விரைவில் இடிந்து விழும் அபாயமும், அதனால், தண்ணீர் செல்ல முடியாத நிலையும் ஏற்படும்.
எனவே, பழுதடைந்த பாலத்தை அப்புறப்படுத்தி விட்டு, அதே இடத்தில் புதிதாக பாலம் கட்ட வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.