கொள்ளிடம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
By DIN | Published On : 11th September 2019 09:14 AM | Last Updated : 11th September 2019 09:14 AM | அ+அ அ- |

கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கர்நாடகம், கேரள மாநிலங்களில் பெய்த பலத்த மழை காரணமாக கே.ஆர்.எஸ். அணை, கபினி அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணை முழுகொள்ளளவான 120 அடியை கடந்த 7-ஆம் தேதி எட்டியது. மேலும், அந்த அணையிலிருந்து உபரி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
எனவே கொள்ளிடம் ஆற்றங்கரையோர கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள், பொதுமக்கள் மேடான பகுதிக்குச் சென்று பாதுகாப்பாக இருக்க வேண்டும். குறிப்பாக, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி வட்டங்களில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் உரிய பாதுகாப்பு ஏதுமின்றி கொள்ளிடம் ஆற்றில் குளித்தல், நீந்துதல், மீன்பிடித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடாமலிருக்க வேண்டும்.
பாதுகாப்பற்ற முறையில் புகைப்படங்கள் அல்லது சுயபடங்கள் (செல்பி) எடுப்பதை தவிர்க்க வேண்டும். குழந்தைகளை நீர்நிலைகளின் அருகே அனுமதிக்காமல் பாதுகாப்பாக வைத்திருக்கும்படியும், விவசாயிகள் நீர்நிலைகளை கடக்கும்போது தங்களது கால்நடைகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும்படியும் மாவட்ட ஆட்சியர் அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.