இளைஞரைக் கொல்ல சதி: 4 பேர் கைது
By DIN | Published On : 11th September 2019 09:11 AM | Last Updated : 11th September 2019 09:11 AM | அ+அ அ- |

இளைஞரை கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக 4 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
நெல்லிக்குப்பம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ்பாபு தலைமையிலான போலீஸார் திங்கள்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். நெல்லிக்குப்பம் - மாளிகைமேடு சாலையில் ரோந்து சென்றபோது, இரண்டு மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி விட்டு 5 இளைஞர்கள் நின்றுகொண்டிருந்ததை போலீஸார் கவனித்தனர். அவர்களை விசாரிக்க அழைத்தபோது தப்பிச் செல்ல முயன்றனராம். இதையடுத்து அவர்களை துரத்திச் சென்ற போலீஸார் 4 பேரை பிடித்தனர். விசாரணையில், அவர்கள் புதுவை மாநிலம் அரியாங்குப்பத்தைச் சேர்ந்த உதயா (36), விவேக் என்ற வைத்தியநாதன், வில்லியனூர் சிவசங்கர் (31), பூமியான்பேட்டை சந்தோஷ்குமார் (21) ஆகியோர் எனத் தெரியவந்தது.
இவர்கள், புதுவையைச் சேர்ந்த ரெளடி கர்ணனின் கூட்டாளிகள் என்பதும், நெல்லிக்குப்பத்தில் கொள்ளையில் ஈடுபட திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவித்தனர்.
போலீஸாரின் தொடர் விசாரணையில் அவர்கள் நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த இளைஞரை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, 4 பேரையும் கைது செய்த போலீஸார், ஒரு மோட்டார் சைக்கிள், அவர்களிடம் இருந்து கத்தி, அரிவாள் ஆகிய ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய கொங்கராயனூரைச் சேர்ந்த மணி என்பவரை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் கைதானவர்களின் புகைப்படங்களை காவல் துறையினர் வெளியிட்டனர். அதில், தலா 2 பேரின் கை, கால்களில் கட்டு இருந்தது. அவர்கள் தப்பியோடிய போது கீழே விழுந்ததில் காயம் அடைந்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.