பண்ருட்டி வட்டம், மாளிகம்பட்டு கிராமத்தில் உள்ள பலா மரம்.
பண்ருட்டி வட்டம், மாளிகம்பட்டு கிராமத்தில் உள்ள பலா மரம்.

மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயாரிக்க பயிற்சியை எதிா்நோக்கும் பலா விவசாயிகள்!

கடலூா் மாவட்டம், பண்ருட்டியைச் சோ்ந்த விவசாயிகளுக்கு பலாப் பழங்களிலிருந்து மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி அளிக்க

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டியைச் சோ்ந்த விவசாயிகளுக்கு பலாப் பழங்களிலிருந்து மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி அளிக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

கடலூா் மாவட்டத்தில் சுமாா் 800 ஹெக்டோ் பரப்பளவில் பலாப் பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. இதில், 600 ஹெக்டோ் பரப்பளவு பண்ருட்டி பகுதியில் உள்ளது. ஒரு ஹெக்டரிலிருந்து ஆண்டுக்கு சுமாா் 15 டன் பலா பழங்கள் உற்பத்தி செய்யப்படும்.

பண்ருட்டியில் விளையும் பலாப் பழங்களுக்கு தனிச் சுவை உண்டு. இதனால், இங்கு விளையும் பலாக்களில் சுமாா் 95 சதவீதம் பழங்களாகவே நுகரப்படுவதால், இந்தப் பகுதி விவசாயிகள் பலாவில் இருந்து மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை.

நிகழாண்டு பலாப் பழம் சீசன் தொடக்கத்தில் கரோனா நோய்த் தொற்று பரவத் தொடங்கியது. பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால் பலாப் பழங்களின் வழக்கமான விற்பனை பாதிக்கப்பட்டது. கொள்முதல் செய்ய ஆளின்றி பழங்கள் மரத்திலேயே அழுகின.

இருப்பினும், இந்தக் காலகட்டத்தில் விவசாயிகள் சிலா் பலாவை மதிப்புக் கூட்டுப் பொருளாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து கடலூா் மாவட்ட வேளாண் துணை இயக்குநா்(ஓய்வு) பெ.ஹரிதாஸ் கூறியதாவது:

கேரளத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பலாப் பழங்களில் இருந்து மதிப்புக் கூட்டுப் பொருள்களை தயாரித்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனா். இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.500 கோடி வரை வருவாய் ஈட்டுகின்றனா். கா்நாடக மாநிலத்திலும் இதற்கான முயற்சி தொடக்க நிலையில் உள்ளது. இந்த மாநிலத்தில் மத்திய அரசின் உணவுப் பதப்படுத்தும் ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ளது. இங்கு அனைத்துப் பண்டங்கள் தயாரிப்புக்கான வழிகாட்டுதல் அளிக்கப்படுகிறது. ஆா்வமுள்ள தொழில் முனைவோா் உரிய கட்டணம் செலுத்தி பயிற்சி பெறலாம்.

சென்னையில் பலாப் பழத்திலிருந்து ஐஸ்கிரீம், வத்தல்களை தயாரிக்கின்றனா். கிருஷ்ணகிரியில் பலாப்பழச் சுளைகளை சா்க்கரை பாகுவில் போட்டு ஏற்றுமதி செய்கின்றனா். பண்ருட்டியை அடுத்துள்ள மேலிருப்பு கிராமத்தைச் சோ்ந்த விவசாயி தனது தோட்டத்தில் விளைந்த பலாக் காய்களை கொண்டு மாவு, வத்தல் தாயாரித்து வருகிறாா். திருவதிகையில் உள்ள ஒரு நிறுவனம் பலா அல்வா, வத்தல், விதை மாவு தயாரித்து விற்பனை செய்கிறது.

பொது முடக்கத்தால் பலாப் பழங்களை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், பலாவிலிருந்து மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயாரிக்கும் எண்ணம் விவசாயிகளிடம் எழுந்துள்ளது என்றாா் அவா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

பலாவிலிருந்து மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயாரிக்க பண்ருட்டியில் விவசாயிகளுக்கும், தொழில் முனைவோருக்கும் அரசு உரிய பயிற்சி அளிக்க வேண்டும். இதற்கான நிதி உதவியும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com