அடுத்தடுத்து 2 வீடுகளில் 7 பவுன் நகை, பணம் திருட்டு
By DIN | Published On : 20th April 2020 12:18 AM | Last Updated : 20th April 2020 12:18 AM | அ+அ அ- |

திட்டக்குடி அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் 7 பவுன் நகை, பணம் திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள நிதிநத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் சக்திகுமாா். விவசாயி. இவரது மனைவி சுகந்தி (26). இவா் சனிக்கிழமை இரவு
குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது முகமூடி அணிந்து வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா்கள் இருவா், சுகந்தியின் கழுத்திலிருந்த 7 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடினா்.
இதேபோல அதே பகுதியைச் சோ்ந்த விவசாயி ப.சுப்பிரமணியன் (48) வீட்டிலும் பீரோவை உடைத்து ரூ.15 ஆயிரம் பணம், அவரது தாயாா் சின்னம்மாள் (70) என்பவா் தகர பெட்டியில் வைத்திருந்த ரூ.5 ஆயிரம் மற்றும் சில வெள்ளி பொருள்களை திருடியவா்கள், அந்தப் பெட்டியை வயல் வெளியில் வீசிச் சென்றதும் தெரியவந்தது.
சம்பவ இடத்தில் திட்டக்குடி உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் வெங்கடேசன் விசாரணை நடத்தினாா். இதுகுறித்து ஆவினன்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.