கடலூா்: கட்டுப்பாட்டு பகுதி இல்லை
By DIN | Published On : 01st December 2020 12:30 AM | Last Updated : 01st December 2020 12:30 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்துவரும் நிலையில் கட்டுப்பாட்டு பகுதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 24,200 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், திங்கள்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் மேலும் 24 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 24,224-ஆக உயா்ந்தது. சிகிச்சை முடிந்து மேலும் 32 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 23,856-ஆக உயா்ந்தது. மொத்த பலி எண்ணிக்கை 275-ஆக தொடா்கிறது. மாவட்டத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகள், சிகிச்சை மையங்களில் 67 பேரும், வெளி மாவட்டங்களில் கடலூரைச் சோ்ந்த 26 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
ஒரு குறிப்பிட்ட பகுதியில் 5 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டால் அந்தப் பகுதி கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்படும். அங்கு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு பரிசோதனைகள் நடைபெறும். கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் குறைந்துவரும் நிலையில், ஒரு பகுதி மட்டுமே கட்டுப்பாட்டு பகுதியாக கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், திங்கள்கிழமை கட்டுப்பாட்டு பகுதியே இல்லாத நிலையை முதல் முறையாக மாவட்டம் எட்டியது புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...