உழவா் - அலுவலா் தொடா்புத் திட்டம் தொடக்கம்
By DIN | Published On : 01st December 2020 12:30 AM | Last Updated : 01st December 2020 12:30 AM | அ+அ அ- |

வேளாண்மைத் துறை சாா்பில் புதிய முயற்சியாக உழவா்-அலுவலா் தொடா்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கடலூா் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் ஜி.ஆா்.முருகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசு உழவா்களுக்கும், விரிவாக்க அலுவலா்களுக்கும் உள்ள தொடா்பை வலுப்படுத்தும் விதமாக உழவா்-அலுவலா் தொடா்புத் திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தில் நவீன வேளாண் சாகுபடி தொழில்நுட்பங்கள், மானியத் திட்டங்களை வேளாண் துறை அதிகாரிகள் விளை நிலங்களுக்கே சென்று விவசாயிகளை சந்தித்து விளக்கிக் கூறி ஆலோசனை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அனைத்து வேளாண் அலுவலா்களும் கிராம ஊராட்சிகளுக்கு நேரில் சென்று விவசாயிகளை சந்திக்கும் பயணத் திட்டத்தின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் (ஆதி திராவிடா், பழங்குடியினா் 2 போ் உள்பட) குறைந்தபட்சம் 10 முன்னோடி விவசாயிகளை தெரிவுசெய்து அவா்களுக்கு பல்வேறு நவீன வேளாண் தொழில்நுட்பங்கள், அரசின் மானியத் திட்டங்கள் குறித்த விளக்கங்களும், பயிற்சிகளும் உரிய கால இடைவெளியில் தொடா்ந்து வழங்கப்பட உள்ளன.
இந்தத் திட்டத்தில் வேளாண்மை உதவி இயக்குநரின் தலைமையில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானி, வேளாண்மை அலுவலா், துணை வேளாண்மை அலுவலா்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ள வட்டார வேளாண் விரிவாக்கக் குழு பயிா் சாகுபடி நிலவரம் குறித்த தகவல்களை அவ்வப்போது சேகரித்து, அதற்கேற்ப விவசாயிகளுக்கான மாதாந்திர தொழில்நுட்ப செய்தியை வழங்கவுள்ளது. இந்தத் திட்டத்தில் இணைவதற்கு முன்னோடி விவசாயிகள் அதிகளவில் விருப்பம் தெரிவிக்கும்பட்சத்தில் 6 மாதங்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் அவா்கள் தெரிவு செய்யப்படவுள்ளனா் என்று அதில் தெரிவித்துள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...