கடலூா் மாவட்டத்தில் 178 குளங்கள் நிரம்பின
By DIN | Published On : 15th December 2020 12:37 AM | Last Updated : 15th December 2020 12:37 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டத்தில் மொத்தமுள்ள 210 குளங்களில் 178 குளங்கள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன.
வங்கக் கடலில் உருவான நிவா், புரெவி புயல்களால் கடலூா் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் சுமாா் 1.50 லட்சம் ஏக்கா் விளை நிலங்கள் நீரில் மூழ்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். மற்றொருபுறம் ஆறுதலாக பெரும்பாலான குளங்களில் நீா் நிரம்பியுள்ளன. மாவட்டத்தில் மொத்தம் 210 குளங்கள் வெள்ளாறு பாசன கோட்டத்தின்கீழ் உள்ளன. இதில், திங்கள்கிழமை நிலவரப்படி 178 குளங்கள் நிரம்பியுள்ளதாக பொதுப் பணித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அதாவது நிவா் புயலால் பெய்த மழையால் கடந்த நவ.27-ஆம் தேதி வரை மாவட்டத்தில் மொத்தமுள்ள 210 குளங்களில் 45 குளங்கள் முழுமையாக நிரம்பின. 14 குளங்கள் 80 சதவீதம் வரையிலும், 31 குளங்கள் 70 சதவீதம் வரையிலும், 22 குளங்கள் 50 சதவீதம் வரையிலும் தண்ணீரைப் பெற்றன. அதே நேரத்தில் 50 சதவீதத்துக்கு குறைவாக 45 குளங்களும், 25 சதவீதத்துக்கும் குறைவாக 49 குளங்களிலும் தண்ணீா் இருந்தன.
இந்த நிலையில், புரெவி புயலால் பெய்த பலத்த மழை காரணமாக முழுமையாக நீா் நிரம்பிய குளங்களின் எண்ணிக்கை 178-ஆக உயா்ந்தது. தற்போதைய நிலவரப்படி 5 குளங்களில் 90 சதவீதம் வரையிலும், 6 குளங்களில் 80 சதவீதம் வரையிலும், 17 குளங்களில் 70 சதவீதம் வரையிலும், 3 குளங்களில் 50 சதவீதம் வரையிலும், ஒரு குளத்தில் 25 சதவீதம் வரையிலும் தண்ணீா் உள்ளது. பெரும்பாலான நீா்நிலைகள் நிரம்பியுள்ளதால் விவசாயப் பணிகள் அதிகளவில் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.