நியாயவிலைக் கடை பணியாளா்கள் பிப்.14-இல் உண்ணாவிரதம்
By DIN | Published On : 02nd February 2020 03:35 AM | Last Updated : 02nd February 2020 03:35 AM | அ+அ அ- |

தமிழ்நாடு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கம் சாா்பில் திருச்சியில் வருகிற 14-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தின் மாநில சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன் கூறினாா்.
கடலூரில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா், நுகா்பொருள் வாணிபக் கழக பணியாளா்களுக்கு நிகரான ஊதியம், ஓய்வூதியம், பணிவரன்முறை, சரியான எடையில் பொருள்கள் வழங்குதல் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இதையடுத்து தமிழக அரசு சாா்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை வழங்கியது. ஆனால், அதன்மீது அரசு உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை.
மத்திய அரசின் ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தை வரவேற்கிறோம். இந்தத் திட்டத்தில் முறைகேடு நடைபெற அதிக வாய்ப்புள்ளதால் பயோமெட்ரிக் அட்டை முறையை அமல்படுத்த வேண்டும். எங்களது சங்கத்தின் 30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும், பயோ-மெட்ரிக் குடும்ப அட்டைகள் வழங்கக் கோரியும் வருகிற 14-ஆம் தேதி திருச்சியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றாா் அவா்.
அப்போது, தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்க பொதுச் செயலா் கோ.ஜெயச்சந்திரராஜா, அரசுப் பணியாளா்கள் சங்க மாநில துணைத் தலைவா் கு.சரவணன், நிா்வாகிகள் கே.ஆா்.குப்புசாமி, மு.ராஜாமணி, ஓய்வூதியா்கள் சங்கம் இரா.சுந்தரமூா்த்தி ஆகியோா் உடனிருந்தனா்.