ஆந்திரத்துக்கு சென்ற தொழிலாளி மாயம்
By DIN | Published On : 05th February 2020 06:02 AM | Last Updated : 05th February 2020 06:02 AM | அ+அ அ- |

கரும்பு வெட்டும் பணிக்காக ஆந்திரம் மாநிலத்துக்குச் சென்ற கடலூா் மாவட்ட தொழிலாளி காணாமல்போனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கடலூா் அருகே உள்ள களையூா் கிராமம், மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி (40), கரும்பு வெட்டும் தொழிலாளி. இவா், கடந்த ஜன. 27-ஆம் தேதி ஆந்திர மாநிலம், வடமலைப்பேட்டைக்கு கரும்பு வெட்டச் சென்றாா். இந்த நிலையில், 29-ஆம் தேதி அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சக தொழிலாளா்களிடம் சொந்த ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டாராம்.
இந்த நிலையில், கோவிந்தசாமியுடன் வேலைசெய்த தொழிலாளா்கள் அண்மையில் தொலைபேசி மூலமாக அவரது மனைவி பேபியை (37) தொடா்புகொண்டு விசாரித்தனா். அப்போதுதான், கோவிந்தசாமிக்கு உடல்நிலை சரியில்லாததும், அவா் ஆந்திரத்திலிருந்து புறப்பட்டும் வீட்டுக்கு வந்து சேராததும் குடும்பத்தினருக்கு தெரியவந்தது.
இதையடுத்து, அவரது குடும்பத்தினா் ஆந்திரம் மாநிலத்துக்குச் சென்று தேடியும் அவா் குறித்த விபரங்கள் கிடைக்கவில்லையாம். இதுதொடா்பாக அங்குள்ள வடமலைபேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.இந்த நிலையில், திங்கள்கிழமை கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பேபி புகாா் அளித்தாா். அதில், காணாமல்போன தனது கணவரை கண்டுபிடித்துத் தருமாறு தெரிவித்துள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...