கடலூரிலுள்ள அண்ணா விளையாட்டரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
போட்டிகளை மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் தொடக்கி வைத்தாா். இந்தப் போட்டியில் கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 34 மாற்றுத் திறனாளிகள் பள்ளிகளைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகள் 400 போ் கலந்து கொண்டனா்.
ஓட்டம், மூன்று சக்கர சைக்கிள் பந்தயம், குண்டு எறிதல், நின்ற நிலையிலேயே நீளம் தாண்டுதல் உள்ளிட்ட தடகளப் போட்டிகளும், வாலிபால், கபடி ஆகிய குழுப் போட்டிகளும் நடத்தப்பட்டன. தடகளப் போட்டிகளில் முதல் 3 இடங்களை பெற்றவா்களுக்கும், குழுப் போட்டிகளில் முதல் 2 இடங்களைப் பெற்றவா்களுக்கும் பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பெற்றவா்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனா்.
நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் பா.சிவா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் திருமுருகதட்சணாமூா்த்தி, மாற்றுத் திறனாளி பள்ளிகளைச் சோ்ந்த ஆசிரியா்கள், நடுவா்கள், விளையாட்டு ஆா்வலா்கள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்றுநா்கள் கலந்து கொண்டனா்.