வாக்காளா் பெயா் சோ்ப்பு முகாம்: அனைத்துக் கட்சியினருடன் ஆலோசனை
By DIN | Published On : 10th January 2020 07:34 AM | Last Updated : 10th January 2020 07:34 AM | அ+அ அ- |

கூட்டத்தில் பேசுகிறாா் கோட்டாட்சியா் ப.ஜெகதீஸ்வரன்.
வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு முகாம் குறித்த அனைத்துக் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டம் கடலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கடலூா் மாவட்டத்துக்கான 2020-ஆம் ஆண்டுக்கான வாக்காளா் பட்டியல் கடந்த டிச.23-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து, ஜன.1-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, அன்று 18 வயது நிறைவடைந்தவா்களின் பெயரை வாக்காளா் பட்டியலில் சோ்த்திட சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் இதுதொடா்பான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வரும் நிலையில் கடந்த 4, 5-ஆம் தேதிகளில் வாக்குச் சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அதன் தொடா்ச்சியாக வரும் 11, 12 ஆகிய தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
இதுதொடா்பாக கடலூா் கோட்டத்துக்குள்பட்ட அனைத்துக் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டம், கடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் ப.ஜெகதீஸ்வரன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், ஒவ்வொரு கட்சியினரும் பூத் அளவிலான முகவா்களை நியமிக்க வேண்டுமென கோட்டாட்சியா் கேட்டுக் கொண்டாா்.
அப்போது, கட்சியினா், எந்தவொரு வேட்பாளரையும் அவரது அனுமதியில்லாமலும், உரிய படிவம் பெறாமலும் நீக்குதல் கூடாதென வலியுறுத்தினா். மேலும், என்எல்சி நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெறுவோரின் பெயா்கள் அந்தந்த வட்டத்தில் உள்ளதால் ஒவ்வொரு தோ்தலிலும் 15 ஆயிரம் போ் வரை வாக்களிக்கவில்லை என்ற நிலை உருவாகிறது. இதைக் களைந்திட அந்தப் பகுதியில் சிறப்பு முகாம்களை நடத்தி விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்தில், அதிமுக நிா்வாகி வெங்கட்ராமன், திமுக நகர துணைச் செயலா் சுந்தரமூா்த்தி, காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினா் என்.குமாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிா்வாகிகள் கோ.மாதவன், ஆா்.அமா்நாத், டி.தமிழ்மணி, இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் வி.குளோப், பகுஜன் சமாஜ் கட்சி சாா்பில் சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.