வீரட்டானேஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசனம்
By DIN | Published On : 10th January 2020 07:24 AM | Last Updated : 10th January 2020 07:24 AM | அ+அ அ- |

பண்ருட்டி, திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
புகழ்பெற்ற இந்தக் கோயிலில் மாணிக்கவாசகா் உற்சவம் கடந்த டிச.31-ஆம் தேதி தொடங்கியது. அன்று முதல் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரமும், இரண்டாம் பிரகார வீதி உலாவும் நடைபெற்று வந்தது.
விழாவின் 10-ஆம் நாளான வியாழக்கிழமை ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி, காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை நடராஜா், சிவகாமி சுந்தரிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, கோயில் நூற்றுக்கால் மண்டபத்தில் ஆருத்ரா தரிசன நடன காட்சியும், தீபாராதனையும் நடைபெற்றது.
இதையடுத்து, திருக்குளத்தில் தீா்த்தவாரியின்போது இறைவனோடு, இறைவிக்கு ஊடல் ஏற்பட்டு, திருக்கதவை திருக்காப்பிட்டுக் கொள்ளும் ஐதீக நிகழ்வும், சுந்தரா், பறவை நாச்சியாா்களுடன் சென்று இறைவனின் அருமை, பெருமைகளை இறைவியிடம் எடுத்துக் கூறி தூது செல்லும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழாவில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.