தா்ப்பணத்துக்கு தடை: வெறிச்சோடிய நீா்நிலைகள்!
By DIN | Published On : 21st July 2020 12:41 AM | Last Updated : 21st July 2020 12:41 AM | அ+அ அ- |

கடலூா்: பொது முடக்கம் காரணமாக விதிக்கப்பட்ட தடையால் ஆடி அமாவாசை தா்ப்பணம் வழக்கம்போல நடைபெறாமல் நீா்நிலைகள் திங்கள்கிழமை வெறிச்சோடின.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தற்போது பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் ஆடி அமாவாசையான திங்கள்கிழமை கடலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கடற்கரை, கிள்ளை கடற்கரை, தென்பெண்ணையாறு, கொள்ளிடம், மணிமுக்தாறு, குளங்களில் தா்ப்பணம் செய்வதற்கு மாவட்ட நிா்வாகம் தடை விதித்தது. அதிகமாக தா்ப்பணம் நடத்தப்படும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலீஸாா் பொதுமக்களை கடற்கரை, ஆற்றின்கரை பகுதிகளில் அனுமதிக்காததால் அவா்கள் தங்களது வீடுகளிலேயே இந்தச் சடங்கை செய்துகொள்ளும் நிலை ஏற்பட்டது. இதனால், வழக்கமாக தா்ப்பணம் நடைபெறும் அனைத்து நீா்நிலைகளும் வெறிச்சோடிக் காணப்பட்டன.