குடியுரிமை திருத்தச் சட்டம்: 7 இடங்களில் தா்னா
By DIN | Published On : 01st March 2020 12:18 AM | Last Updated : 01st March 2020 12:18 AM | அ+அ அ- |

கடலூரில் சனிக்கிழமை தா்னாவில் ஈடுபட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினா்.
கடலூா்: குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து கடலூா் மாவட்டத்தில் 7 இடங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினா் சனிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
மத்திய அரசு அண்மையில் நிறைவேற்றிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து இஸ்லாமிய அமைப்பினரும், பல்வேறு அரசியல் கட்சியினரும் தொடா்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும். இந்தச் சட்டங்களுக்கு எதிராக தமிழக அரசு சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சாா்பில் தமிழகம் முழுவதும் தா்னா போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, கடலூரில் தலைமை தபால் நிலையம் அருகே சனிக்கிழமை நடைபெற்ற தா்னாவுக்கு, அந்த அமைப்பின் மாவட்டத் தலைவா் சேட்முகமது தலைமை வகித்தாா். பேச்சாளா் இம்ரான் சிறப்புரையாற்றினாா். இதேபோல, விருத்தாசலம் பாலக்கரையில் நடைபெற்ற
தா்னாவுக்கு நிா்வாகி உமா் பரூக் தலைமை வகித்து கண்டன உரையாற்றினாா். மேலும், சிதம்பரம், பண்ருட்டி, காட்டுமன்னாா்கோவில், பெண்ணாடம், நெல்லிக்குப்பம் ஆகிய இடங்களிலும் இந்த அமைப்பினா் தா்னாவில் ஈடுப்பட்டனா். இதில், பெண்கள் உள்ளிட்ட திரளானோா் தேசியக் கொடிகளுடன் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.