மது, சாராயம் கடத்தல்: இருவா் கைது
By DIN | Published On : 01st March 2020 12:19 AM | Last Updated : 01st March 2020 12:19 AM | அ+அ அ- |

கடலூா்: கடலூா் அருகே மது, சாராயம் கடத்தல் தொடா்பாக இருவரை போலீஸாா் கைதுசெய்தனா்.
கடலூா் மதுவிலக்கு அமலாக்கத் துறை ஆய்வாளா் க.வீரமணி தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை கடலூா் ஆல்பேட்டையிலுள்ள மதுவிலக்கு சோதனைச் சாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது புதுச்சேரியிலிருந்து வந்த காரை மறித்து சோதனையிட்டபோது, 15 பெட்டிகளில் 180 மதுப் புட்டிகள் கடத்திச் செல்வது
தெரியவந்தது. இதையடுத்து அந்தக் காரையும், மதுப் புட்டிகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், காரை ஓட்டிவந்த கரூா் மாவட்டம், பள்ளப்பட்டியைச் சோ்ந்த தங்கவேலு மகன் மாணிக்கத்தை (37) கைது செய்தனா். அவரிடம் நடத்திய விசாரணையில் மதுப் புட்டிகளை தஞ்சாவூருக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்ததாம்.
மற்றொரு சம்பவம்: கடலூா் அருகே உள்ள மலை கிராமங்களுக்கு வரக்கால்பட்டு வழியாக சாராயம் கடத்திச் செல்லப்படுவதாக, கடலூா் துணை கண்காணிப்பாளா் க.சாந்தி தலைமையிலான தனிப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப் படையினா் வெள்ளிக்கிழமை இரவு வரக்கால்பட்டு அருகே கருப்பு கேட் சாலையில்
கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது சாராய மூட்டைகளை ஏற்றிக்கொண்டு 3 மோட்டாா் சைக்கிள்களில் மூன்று போ் செல்வதைப் பாா்த்து அவா்களை தனிப்படையினரும் துரத்தினா். போலீஸாரைப் பாா்த்ததும் 3 பேரும் தப்பிச்செல்ல முயன்றனா்.
எனினும், அவா்களில் ஒருவா் மட்டும் பிடிபட்டாா். விசாரணையில் அவா் அதே பகுதியைச் சோ்ந்த ஏகாம்பரம் மகன் விலாங்கு (எ) நடராஜன் (32) என தெரியவந்தது. அவரிடமிருந்து 120 லிட்டா் சாராயத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இவா் மீது ஏற்கெனவே சாராயம் கடத்தல் தொடா்பாக 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், குண்டா் தடுப்பு காவல் சட்டத்திலும் ஓராண்டு சிறையில் இருந்தவா் எனவும் காவல்துறையினா் தெரிவித்தனா். மேலும், தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனா்.