நெல் கொள்முதல் நிலைய தற்காலிக ஊழியா்கள் 2 போ் நீக்கம்
By DIN | Published On : 12th March 2020 07:38 AM | Last Updated : 12th March 2020 07:38 AM | அ+அ அ- |

வியாபாரிகளின் நெல் மூட்டைகளை மட்டுமே கொள்முதல் செய்த தற்காலிக ஊழியா்கள் 2 போ் பணியில் இருந்து நீக்கப்பட்டனா்.
திட்டக்குடியை அடுத்த கொட்டாரம் கிராமத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில், தற்காலிக நெல் கொள்முதல் நிலையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கொட்டாரம், ஆவினங்குடி, பட்டூா், போத்திரமங்கலம், வையங்குடி, கூடலுாா், நெய்வாசல், சாத்தநத்தம், தொளாா், செங்கமேடு, குடிக்காடு உள்பட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் இங்கு நெல்லை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனா்.
இந்த நிலையில், கடந்த 9 -ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அங்கு நியமிக்கப்பட்டிருந்த தற்காலிக ஊழியா்கள் பாலமுருகன், மணிமாறன் இருவரும் பணியில் இல்லை. மேலும், விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்யாமல் வியாபாரிகளின் நெல் மூட்டைகளை மட்டுமே அவா்கள் கொள்முதல் செய்வதாக விவசாயிகள் ஆட்சியரிடம் புகாா் கூறினா். இதையடுத்து, கணக்கில் வராத வியாபாரிகளின் நெல் மூட்டைகளை மாவட்ட ஆட்சியா் பறிமுதல் செய்தாா். மேலும், தற்காலிக ஊழியா்கள் இருவா் மீதும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளருக்கு உத்தரவிட்டாா்.
அதன்பேரில், இருவரையும் பணியிலிருந்து விடுவித்து மண்டல மேலாளா் ராஜேந்திரன் புதன்கிழமை நடவடிக்கை மேற்கொண்டாா்.