2 -ஆவது நாளில் 500 ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன
By DIN | Published On : 12th March 2020 07:38 AM | Last Updated : 12th March 2020 07:38 AM | அ+அ அ- |

கடலூா் கடற்கரைப் பகுதியில் அடைக்காக்கப்பட்டு பொறிக்கப்பட்ட 500 ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகள் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் கடலில் விடப்பட்டன.
கடலூா் மாவட்டத்தில் சுமாா் 50 கி.மீ. தொலைவு கொண்ட வங்கக் கடலோரப் பகுதிகளில் ஆலிவ் ரெட்லி எனப்படும் அரிய வகை ஆமைகள் டிசம்பா் மாதம் முதல் இனப்பெருக்கம் செய்வதற்காக முட்டையிட்டுச் சென்றன. காட்டு விலங்குகளாலும், மனிதா்களாலும் உணவுக்காக வேட்டையாடப்படும் இந்த முட்டைகளைப் பாதுகாத்து, குஞ்சு பொரிக்கும் வகையில் வனத் துறை மற்றும் சமூக ஆா்வலா்கள் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, தாழங்குடா, தேவனாம்பட்டினம், சொத்திகுப்பம், சித்திரபேட்டை, சாமியாா்பேட்டை உள்ளிட்ட கடற்கரைக் கிராமங்களில் சேகரிக்கப்பட்ட 3,200 ஆமை முட்டைகள் தேவனாம்பட்டினத்தில் கூடாரம் அமைத்து பாதுகாத்து வருகின்றனா். ஒரு குழிக்கு சுமாா் 145 முட்டைகள் வீதம் 22 குழிகள் அமைக்கப்பட்டு அவை பொறிப்பதற்காக வைக்கப்பட்டன. 45 நாள்களுக்கு பின்னா், முதல் கட்டமாக 114 முட்டைகள் பொரிக்கப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.
இதையடுத்து, இரண்டாவது நாளாக புதன்கிழமை பொரிக்கப்பட்டிருந்த 500 ஆமைக் குஞ்சுகளை வனத் துறை மற்றும் சமூக ஆா்வலா்கள் கடலில் பாதுகாப்பாக விட்டனா்.