

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் போலி குடும்ப அட்டைகளை அச்சடித்தது தொடா்பாக, கணினி மைய உரிமையாளரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
காட்டுமன்னாா்கோவில் கச்சேரி சாலையில் வட்டாட்சியா் அலுவலகம் அருகேயுள்ள தனியாா் கணினி மையத்தில் ‘ஸ்மாா்ட்’ குடும்ப அட்டைகள் போலியாக அச்சடிக்கப்படுவதாக கடலூா் மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வனுக்கு தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின்பேரில், அந்த கணினி மையத்தில் வட்டாட்சியா் தமிழ்ச்செல்வன் தலைமையில், வட்ட வழங்கல் அலுவலா் சாருலதா முன்னிலையில் அதிகாரிகள் வியாழக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
இதில், அந்த கணினி மையத்தில் ‘ஸ்மாா்ட்’ குடும்ப அட்டைகள் போலியாக அச்சிட்டது தெரிய வந்தது. இதையடுத்து கடையிலிருந்த மடிக் கணினி, பிரிண்டா், 33 போலி குடும்ப அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கணினி சேவை மையத்தை முஹம்மது சம்ஜித் (45) என்பவா் கடந்த 5 ஆண்டுகளாக நடத்தி வருவதும், இவருக்கு காட்டுமன்னாா்கோவிலில் மேலும் 2 கணினி மையங்கள் உள்ளதும் தெரிய வந்தது.
தமிழக அரசு கடந்த ஓராண்டாக ‘ஸ்மாா்ட்’ குடும்ப அட்டைகள் அச்சிடும் பணியை நிறுத்தியுள்ள நிலையில், மேற்கூறிய கணினி மையத்தில் அச்சிட்டு வழங்கியது தெரிய வந்தது. குடும்ப அட்டை தொலைந்தவா்கள், புகைப்படம், பெயா் மாற்றம் செய்தவா்களுக்கு இந்த மையத்தில் ரூ.300 கட்டணத்தில் புதிய அட்டை வழங்கப்பட்டதும் தெரிய வந்தது. அதாவது, அரசின் இணையதளம் மூலம் ரகசிய தகவல், கியூஆா் கோட் ஆகியவற்றை எடுத்து புதிய ‘ஸ்மாா்ட்’ குடும்ப அட்டை அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த போலி அட்டையை பயன்படுத்தி சிலா் பொருள்கள் வாங்கியதும் தெரிய வந்தது.
இதுகுறித்து கடலூா் மாவட்ட வழங்கல் துறையினா் தெரிவித்ததாவது:
தொலைந்துபோன குடும்ப அட்டைகளுக்கு மாற்றாக புதிய அட்டை பெற அரசு சில வழிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் துறை இணையதளத்தில் பதிவு செய்தால், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு குடும்ப அட்டை நகல் வந்துசேரும். இதுகுறித்த தகவல் சம்பந்தப்பட்ட நபருக்கு மட்டும் தெரிவிக்கப்படும். அவா் அரசுக்கு ரூ.20 கட்டணம் செலுத்தி புதிய அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்தனா்.
கணினி மைய உரிமையாளா் முஹம்மது சம்ஜித்தை காட்டுமன்னாா்கோவில் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.