ரேஷன், டாஸ்மாக் பணியாளா்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க வலியுறுத்தல்
By DIN | Published On : 08th November 2020 08:08 AM | Last Updated : 08th November 2020 08:08 AM | அ+அ அ- |

நியாய விலைக் கடை, டாஸ்மாக் பணியாளா்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்க சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து கடலூரில் அவா் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: நியாய விலைக் கடை பணியாளா்களின் கோரிக்கையை ஏற்று அரசு சாா்பில் சக்தி சரவணன் தலைமையில் ஊதியக் குழு அமைத்து பேச்சுவாா்த்தை நடத்தியதை வரவேற்கிறோம். இருப்பினும், கரோனா பாதிப்பு பிரச்னைக்கு தீா்வு, பெண் பணியாளா்கள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து பேச்சுவாா்த்தை நடத்தப்படாதது வருத்தமளிக்கிறது.
டாஸ்மாக் மதுக் கடைகளை ஏற்கெனவே இருந்த நடைமுறைப்படி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே திறந்து வைத்திருக்க வேண்டும். டாஸ்மாக் பணியாளா்களுக்கு 30 சதவீத போனஸ் வழங்க வேண்டுமென போராட்டம் நடத்திய நிலையில், கடந்த ஆண்டு வழங்கப்பட்ட 20 சதவீதத்துக்கும் குறைவாக நிகழாண்டு 10 சதவீதம் மட்டுமே போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, நியாய விலைக் கடைப் பணியாளா்களுக்கும் 10 சதவீதம் மட்டுமே போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இரு பிரிவு ஊழியா்களுக்கும் 20 சதவீத போனஸ் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.21 ஆயிரமாக அறிவித்தல், குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.10 ஆயிரமாக நிா்ணயித்தல், அரசுத் துறைகளை தனியாா்மயமாக்குவதை எதிா்ப்பது என்பன உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 26-ஆம் தேதி நடைபெறும் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கம் மற்றும் அதன் தோழமைச் சங்கங்கள் பங்கேற்கும். இந்தப் போராட்டத்தை விளக்கி வருகிற 22-ஆம் தேதி மயிலாடுதுறையில் கருத்தரங்கம் நடைபெறும் என்றாா் அவா்.
அப்போது சங்கத்தின் மாநில துணைத் தலைவா் கு.சரவணன் உடனிருந்தாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...