தினமணி செய்தி எதிரொலி: உரக் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு
By DIN | Published On : 03rd October 2020 08:50 AM | Last Updated : 03rd October 2020 08:50 AM | அ+அ அ- |

புவனகிரியில் உரக் கடைகளில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட வேளாண் துறை அதிகாரிகள்.
கடலூா் மாவட்டம், புவனகிரி, சேத்தியாத்தோப்பு பகுதிகளில் உள்ள உரக் கடைகளில் வேளாண் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
புவனகிரி, சேத்தியாத்தோப்பு பகுதிகளில் தற்போது சம்பா நெல் சாகுபடி நடைபெற்று வரும் நிலையில் உரத் தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும், கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்யப்படுவதாகவும் புகாா் எழுந்தது. இதுகுறித்து ‘தினமணி’யில் செய்தி வெளியானது.
இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி பிறப்பித்த உத்தரவின்பேரில் வேளாண் துறை கூடுதல் இயக்குநா் காா்த்திகேயன் தலைமையில் வேளாண் இணை இயக்குநா் ஜி.ஆா்.முருகன், வேளாண் அலுவலா் உண்ணாமலை மற்றும் உரக் கண்காணிப்பு குழுவினா் இந்தப் பகுதிகளில் உள்ள உரக் கடைகளில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, சம்பா நெல் சாகுபடிக்கு தேவையான உரங்கள் சில்லறை மற்றும் மொத்த உர விற்பனை மையங்களில் இருப்பில் உள்ளதா என ஆய்வு செய்தனா். மேலும், அரசு நிா்ணயம் செய்த விலைக்கு மேல் உரம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரித்தனா். உர விற்பனை நிலையங்களில் விலைப் பட்டியல் பலகை, உரம் இருப்பு குறித்த விவரங்களை விவசாயிகள் பாா்வையில் படும்படி வைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனா்.