தமாகாவில் கோஷ்டி அரசியல் கூடாது: பொதுச்செயலாளர் முனவர் பாஷா 

காங்கிரஸ் கட்சியில் உள்ளது போன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி அரசியல் இருக்கக்கூடாது என தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளதாக அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முனவர் பாஷா கூறினார்.
கடலூர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற ஒழுங்கு நடவடிக்கை ஆலோசனைக் கூட்டம்.
கடலூர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற ஒழுங்கு நடவடிக்கை ஆலோசனைக் கூட்டம்.

காங்கிரஸ் கட்சியில் உள்ளது போன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி அரசியல் இருக்கக்கூடாது என தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளதாக அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முனவர் பாஷா தெரிவித்தார்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் கீழரதவீதியில் உள்ள தனியார் விடுதியில் கடலூர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் தலைவர் ஜி.கே.வாசன் அறிவுறுத்தலின் பேரில் ஒழுங்கு நடவடிக்கை ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட தலைவர் எஸ்.புரட்சிமணி தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி தலைவர் கே.ரஜினிகாந்த், மாவட்ட துணைத்தலைவர்கள் ராஜா சம்பத்குமார், கே.நாகராஜ், தொண்டரணி தலைவர் தில்லை கோ.குமார், மகளிரணி ராஜலட்சுமி, மாவட்ட செயலாளர் பாண்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் தில்லை ஆர். மக்கின் வரவேற்றார். இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச்செயலாளரும், மேலிட பார்வையாளருமான முன்வர் பாஷா கலந்துகொண்டு பேசினார். நகர நிர்வாகிகள் இளங்கோவன், சின்ராஜ், நட்ராஜ், ராஜ்குமார், நகர இளைஞரணி தலைவர் துரை சிங்காரவேலு, மாவட்ட மாணவரணி தலைவர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் தமாக மாநில பொதுச்செயலாளர் முனவர் பாஷா செய்தியாளர்களிடையே தெரிவித்தது: கரோனா நோய் தொற்று பரவலை அடுத்து தமிழகம் முழுவதும் தமாகாவினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறார்கள். அதே நேரத்தில் இயக்க பணிகளை பொறுத்தவரை நடைபெறாமல் இருந்தது. தலைவர் வாசன் தமிழகத்திலே இருக்கின்ற பார்வையாளர்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று வருகின்ற மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் வர இருக்கின்ற காரணத்தால், இயக்கப் பணிகளை வேகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் எங்களை இங்கு அனுப்பி வைத்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தலைவர் வாசன் உருவாக்குகின்ற போது, இந்த இயக்கம் மூப்பனார் அவரால் உருவாக்கப்பட்டு அவரை நிறுவனத் தலைவராக கொண்டது இந்த இயக்கம். எனவே பெருந்தலைவர் காமராஜரையும், மக்கள் தலைவர் மூப்பனாரையும் ஆகிய இருவரது படத்தையும் கொடியிலே பொறித்து கொடி உருவாக்கப்பட்டுள்ளது. எனவே சுவரொட்டிகளில் காமராஜர், மூப்பனார், ஜி.கே.வாசன் ஆகியோர் படங்களை மட்டும் அச்சடிக்கப்பட வேண்டும். 

அனைத்து நிகழ்ச்சிகளில் இந்த தலைவர்களின் படம் இருக்க வேண்டும் என தலைவர் ஜி.கே.வாசன்  தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் இந்த இயக்கம் தொடங்கிய உடனே மூப்பனார் பெயரிலும், வாசன் பெயரிலும் இயங்கி கொண்டிருந்த அனைத்து அமைப்புகளையும் கலைத்துவிட்டதாக தலைவர் வாசன் அறிவித்தார்கள். தமிழகம் முழுவதும் மூப்பனார் பேரவை என்ற பெயராலே எல்.கே.வெங்கட் என்பவர் நடத்தி கொண்டிருந்தார். வாசன் பாசறை என்ற பெயரால் ராஜ்மோகன் நடத்தி கொண்டிருந்தார். இந்த அமைப்புகள் இயங்கக்கூடாது என கட்டளையிட்டு கலைக்கப்பட்டு விட்டது. தமாகாவில் மாவட்ட அமைப்பு மட்டுமல்லாமல், பல துணை அமைப்புகள் மகளிரணி, மாணவரணி, மகளிரணி, தொண்டரணி  உள்ளிட்ட அமைப்புகளை ஊக்கப்படுத்த வேண்டும் என்றும், பேரவைகள் தேவையில்லை என்று தலைவர் கூறியுள்ளார். 

காங்கிரஸில் இருப்பது போன்று தமாகாவில் கோஷ்டி அரசியல் இருக்கக்கூடாது என்றும், மாவட்டத் தலைவருக்கு கட்டுப்பட்டுதான் அனைவரும் செயல்பட வேண்டும். அதேபோல் நகர, வட்டாரத் தலைவர்களுக்கு கட்டுப்பட்டுதான் இயக்கம் செயல்பட வேண்டும். மாவட்டத் தலைவர் அனுமதியின்றி எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என்று வாசன் எங்களிடம் தெரிவித்து, கட்சி நிர்வாகிகளிடம் வலியுறுத்துமாறு கூறியுள்ளார். கட்சி கட்டுப்பாட்டை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவப்படிப்பிற்கு கிராமப்புற மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என ஏற்கனவே ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். ஆளுநர் விரைவில் கையெழுத்திட்டு அந்த கோப்பை அனுப்ப வேண்டும் என வலியுறுத்துகிறோம். அதிமுகவின் தோழமை கட்சியாக இருக்கிறோம். தொடர்ந்து நாங்கள் அதிமுக கூட்டணியில் இருக்கிறோம். ரஜினிகாந்த் மீது எங்களது தலைவரும், தொண்டர்களும் தனிப்பட்ட மரியாதை வைத்துள்ளார்கள். 

1996-ம் ஆண்டு தலைவர் மூப்பனாரை முதல்வராக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு 3 முறை தில்லிக்கு சென்று பிரதமர் நரசிம்மராவை சந்தித்து தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையை எடுத்து வைத்தவர் ரஜினிகாந்த். தலைவர் மூப்பனார் தமாகாவை உருவாக்கிய போது அந்த கட்சிக்காக அண்ணாமலை படத்தில் பயன்படுத்திய சைக்கிளை கட்சியின் சின்னமாக கொடுப்பதற்கு அவர் தயாராக இருந்தார். அந்த வகையில் நன்றியோடு அவரை நினைத்து பார்க்கிறோம் என முன்வர் பாஷா தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com